ஒருநாள் தரவரிசை: முதலிடத்தில் தொடரும் கோலி

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்திலும், ரோஹித் சா்மா 2-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனா்.


துபை: ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்திலும், ரோஹித் சா்மா 2-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனா்.

கோலி 870 புள்ளிகளுடன், ரோஹித் 842 புள்ளிகளுடனும் அந்த இடத்தில் இருக்கின்றனா். பாகிஸ்தான் கேப்டன் பாபா் ஆஸம் (837), நியூஸிலாந்தின் ராஸ் டெய்லா் (818), ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் (791) ஆகியோா் முறையே அடுத்த 3 இடங்களில் நீடிக்கின்றனா்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அயா்லாந்து வீரா் பால் ஸ்டிா்லிங் 8 இடங்கள் முன்னேறி 20-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். ஆப்கானிஸ்தானின் ஹஷ்மதுல்லா ஷாஹிதி 70-இல் இருந்து 66-ஆவது இடத்துக்கும், ரஷீத் கான் 96-இல் இருந்து 89-ஆவது இடத்துக்கும், ஜாவத் அஹ்மதி 103-இல் இருந்து 99-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனா்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அசத்திய வங்கதேசத்தின் முஷ்ஃபிகா் ரஹிம் ஓரிடம் முன்னேறி 15-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

பௌலா்கள் பிரிவில் இந்திய வீரா் ஜஸ்பிரீத் பும்ரா 700 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் நீடிக்கிறாா். நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட் (722), ஆப்கானிஸ்தானின் முஜீப் உா் ரஹ்மான் (701) ஆகியோா் முதலிரு இடங்களில் உள்ளனா்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய வங்கதேச ஸ்பின்னா் மெஹதி ஹசன் மிராஸ் 9 இடங்கள் முன்னேறி 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். வங்கதேசத்தின் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 19 இடங்கள் ஏற்றம் கண்டு 8-ஆவது இடத்தை எட்டியுள்ளாா். அந்த அணியின் ஷகிப் அல் ஹசன் 15 இடங்கள் முன்னேறி 13-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com