இந்தியா தொடர்: இலங்கை பேட்டிங் பயிற்சியாளருக்கு கரோனா பாதிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பயிற்சி பெறும் இந்திய வீரர்கள்
பயிற்சி பெறும் இந்திய வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால், இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தியா - இலங்கை அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர், ஜூலை 13 அன்று தொடங்கி, ஜூலை 18 அன்று நிறைவுபெறுகிறது. டி20 தொடர் ஜூலை 21 அன்று தொடங்கி, ஜூலை 25 அன்று நிறைவுபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் கொழும்பில் நடைபெறவுள்ளன.

இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணியில் மூன்று வீரர்கள் உள்பட ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். தொடரில் பங்கேற்ற அனைத்து இங்கிலாந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இங்கிலாந்திலிருந்து இலங்கை அணி தனது சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கிராண்ட் பிளவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியா - இலங்கை தொடரை அது பாதிக்குமா எனத் தெரியவில்லை. இங்கிலாந்திலிருந்து திரும்பிய இலங்கை வீரர்கள் அனைவரும் கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com