ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் நடுவராக தகுதிபெற்ற முதல் இந்தியர் தீபக் காப்ரா

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் நடுவராக தகுதிபெற்ற முதல் இந்தியர் தீபக் காப்ரா

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்கான நடுவராக இந்தியாவைச் சேர்ந்த தீபக் காப்ரா (33) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தகைய பெருமையைப் பெறும் முதல் இந்தியர் அவராவார். 

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்கான நடுவராக இந்தியாவைச் சேர்ந்த தீபக் காப்ரா (33) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தகைய பெருமையைப் பெறும் முதல் இந்தியர் அவராவார்.
 டோக்கியோ ஒலிம்பிக்கில் வரும் 23-ஆம் தேதி முதல் நடைபெறும் ஆடவருக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் நடுவராக அவர் செயல்பட இருக்கிறார்.
 மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தீபக் தனது 12-ஆவது வயதில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாடத் தொடங்கியுள்ளார். அப்போது குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்த அவருக்கு, பயிற்சிக்கான போதிய வசதிகள் கிடைக்கவில்லை. இருப்பினும் முயற்சித்து 2007-இல் அஸ்ஸாமில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டில் பங்கேற்றார். 2005 முதல் 2009 வரை குஜராத் மாநில சாம்பியனாக இருந்துள்ளார்.
 பின்னர் தனது வாழ்க்கை ஜிம்னாஸ்டிக்ஸ் நடுவராக மாறியது குறித்து தீபக் காப்ரா கூறுகையில், "மிகவும் தாமதமான வயதில் விளையாட்டை தொடங்கியதால் எனக்கான அடிப்படை மிகவும் வலுவானதாக இருக்கவில்லை. எனவே ஜிம்னாஸ்டிக்ஸ் வீரராக எனக்கு சிறந்த எதிர்காலம் இருக்காது என்பதை உணர்ந்தேன்.
 ஆனாலும் அந்த விளையாட்டில் இருந்த ஆர்வம் காரணமாக, நடுவராகச் செயல்படத் தொடங்கினேன். எனது பயிற்சியாளராக இருந்த கெளஷிக் பேடிவாலாவும் நடுவராக இருந்ததால் அவரை முன்னுதாரணமாகக் கொண்டு நடுவராவதற்கான பயிற்சியை தொடங்கினேன். அதுதொடர்பான படிப்பை 2019-இல் நிறைவு செய்து அதில் சிறப்பிடமும் பெற்றேன்.
 பயிற்சியாளராக எனது முதல் சர்வதேச களமானது, 2010-இல் இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளாகும். அதைத் தொடர்ந்து முதல் இந்திய நடுவராக 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் செயல்பட்டேன். உலகக் கோப்பை உள்பட 20 பிரதான போட்டிகளில் நடுவராகச் செயல்பட்ட நிலையில், ஒலிம்பிக் போட்டி ஒன்றே விடுபட்டு வந்தது.
 இந்த நிலையில் தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் நடுவராகப் பணியாற்ற அழைப்பு வந்தது. ஆனால் கரோனா சூழல் காரணமாக ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டபோது எனக்கான வாய்ப்பு வீணாகிவிடுமோ என அஞ்சினேன். ஆனால் இப்போது போட்டியில் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்றார். தீபக் காப்ரா, ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க தொழில்நுட்ப குழுவின் உறுப்பினராக 2018-இல் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com