யூரோ கோப்பை தருணங்கள்

கரோனா சூழல் காரணமாக ஓராண்டு தாமதமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது 2020 யூரோ கோப்பை கால்பந்து போட்டி. பல்வேறு திருப்பங்கள் நிறைந்ததாக
யூரோ கோப்பை தருணங்கள்

கரோனா சூழல் காரணமாக ஓராண்டு தாமதமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது 2020 யூரோ கோப்பை கால்பந்து போட்டி. பல்வேறு திருப்பங்கள் நிறைந்ததாக இருந்த இப்போட்டியில் பல முக்கிய தருணங்களும் இருந்தன.
 டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் களத்தில் சரிந்தது முதல் களத்துக்கு பந்தை கொண்டு வந்து சேர்த்த "டாய் கார்' வரையில் கவனம் ஈர்த்த விஷயங்கள் சில...
 நெகிழ்ச்சி...

யூரோ கோப்பை போட்டி தொடங்கி 3-ஆவது ஆட்டத்தில் நிகழ்ந்தது அந்தச் சம்பவம். ஃபின்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டு களத்தில் சரிந்த டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு மீண்டார்.
 முன்னதாக, ஆட்டத்தின்போது ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்துகொண்டிருந்த மைதானம், எரிக்சன் சரிந்த பிறகு அப்படியே அமைதியானது. அனைவரிடமும் ஒருவித அதிர்ச்சி பரவியிருந்தது. எல்லோரும் செயலற்றுப் போயிருந்த அந்தத் தருணத்தில் ஃபின்லாந்து ரசிகர்கள் குழு ஒன்றுதான் அந்த அமைதியை கலைத்து எதிரணி வீரரான எரிக்சனுக்கு ஆதரவாக "கிறிஸ்டியன்... கிறிஸ்டியன்...' என ஆரவாரம் செய்தது. அதைத் தொடர்ந்து டென்மார்க் ரசிகர்களும் இணைந்துகொண்டு "எரிக்சன்... எரிக்சன்...' என்று முழங்க, அரங்கமே அவருக்கு ஆதரவாக அதிர்ந்தது நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.
 சிறந்த வீரர்...

 இந்த சீசனில் பல முக்கிய கோல்களை தடுத்ததற்காக இத்தாலி கோல்கீப்பர் கியான்லுய்கி டோனாருமா "போட்டியின் சிறந்த வீரர்' விருது வென்றார். ஆனால், ஒரு உயிரைக் காப்பாற்ற உதவியதுடன், இக்கட்டான சூழலில் சிறப்பாகச் செயல்பட்டு சிறந்த வீரராக அனைவரிடமும் பெயர் பெற்றது டென்மார்க் கேப்டன் சைமன் ஜேர்.
 மாரடைப்பு ஏற்பட்டு கிறிஸ்டியன் எரிக்சன் சரிந்த உடனேயே துரிதமாக செயல்பட்ட அவர், மருத்துவக் குழுவினர் வரும் முன்பாக சிபிஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சையை தொடங்கினார். மேலும், எரிக்சன் கழுத்துப் பகுதியில் அவர் சுவாசிப்பதற்கு தடையேதும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். நிகழ்வுகள் ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தாமல் இருக்க எரிக்சனை சுற்றி அணி வீரர்களை வட்ட வடிவில் அரணாக நிற்க வைத்தார். சம்பவத்தைக் கண்டு கதிகலங்கி களத்துக்கு ஓடி வந்த எரிக்சனின் துணைவி சப்ரினாவுக்கு அருகிலிருந்து அவரை தேற்றினார். பின்னர் அணி வீரர்களை அந்த அதிர்ச்சியிலிருந்து மீளச் செய்து ஆட்டத்தை தொடரச் செய்தார் சைமன் ஜேர்.
 அற்புதமான கோல்...

ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது செக் குடியரசு வீரர் பேட்ரிக் ஷிக் அடித்த ஒரு கோல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
 ஹாஃப் லைனுக்கு அருகிலிருந்து இடமிருந்து வலமாக அவர் கர்லிங் செய்து உதைத்த பந்து நேரடியாக கோல்போஸ்ட்டுக்குள்ளாகச் சென்று விழுந்தது. கோல் போஸ்ட்டை விட்டு தள்ளி நின்றிருந்த ஸ்காட்லாந்து கோல்கீப்பர் மார்ஷலால் ஓடிச் சென்றும் பந்தை பிடிக்க முடியாமல் போனது. அந்த கோலின் தொலைவு 49.7 மீட்டராகும். ஸ்காட்லாந்து கோல்கீப்பர் மார்ஷல் தனது இடத்தை விட்டு விலகி வருவதை ஏற்கெனவே பார்த்திருந்ததால், அத்தகைய தருணம் மீண்டும் கிடைத்தபோது இவ்வாறு கோலடித்ததாக பேட்ரிக் ஷிக் பின்னர் கூறினார். இதற்கு முன் 2004 -இல் ஜெர்மனி வீரர் டார்சன் ஃப்ரிங்ஸ் 38.6 மீட்டர் தூரத்திலிருந்து அடித்ததே, இப்போட்டியில் அதிக தொலைவிலிருந்து அடிக்கப்பட்ட கோலாக இருந்தது.
 மோசமான நிகழ்வு...

 பிரான்ஸ் - ஜெர்மனி ஆட்டம் தொடங்கும் முன்பாக "கிரீன்பீஸ்' அமைப்பைச் சேர்ந்த ஒரு நபர் பாராகிளைடர் மூலமாக மைதானத்தின் மேலே பறந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, கிளைடர் கட்டுப்பாட்டை இழக்க, மைதானத்தின் மேற்கூரையுடன் இணைக்கப்பட்டிருந்த ஸ்பைடர் கேமராவின் கேபிளில் அது சிக்கிக் கொண்டது. இதனால் மேற்கூரை லேசாக சேதமடைந்து அதன் இடிபாடுகள் விழுந்ததில் ரசிகர்கள் சிலர் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஆடுகளத்தில் பத்திரமாக தரையிறங்கினார். மைதானத்தின் மேலே பறந்து துண்டுப் பிரசுரங்களை வீசுவதே தங்களது ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் எனவும், இந்த மோசமான நிகழ்வுக்காக வருந்துவதாகவும் கிரீன் பீஸ் அமைப்பு பின்னர் தெரிவித்தது.
 எதிர்பாராத தோல்வி...

 நாக் அவுட் சுற்றில் ஸ்விட்சர்லாந்தை எதிர்கொண்ட பிரான்ஸ், பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. கால்பந்து உலகின் புதிய நட்சத்திரமாக குறிப்பிடப்படும் பிரான்ஸ் வீரர் கிலியன் பாபே கோல் முயற்சியை ஸ்விட்சர்லாந்து கோல்கீப்பர் யான் சோமர் தடுத்ததே அதற்கு காரணம்.
 முன்னதாக அந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமன் ஆக, பெனால்டி ஷூட் அவுட் முறை கையாளப்பட்டது. அதில் ஸ்விட்சர்லாந்து தரப்பில் 5 வாய்ப்புகளிலுமே கோலடிக்கப்பட, பிரான்ஸ் தரப்பில் 4 வாய்ப்புகளில் கோலடிக்கப்பட்டது. கடைசி வாய்ப்பு கிலியன் பாபேவிடம் வழங்கப்பட, அவரது கிக்கை மிகச் சரியாக கணித்து கோல் வாய்ப்பை தடுத்தார் சோமர். ஸ்விட்சர்லாந்து வென்றது. 4 ஆட்டங்களில் கோலடிக்காத அவருக்கு, முதல் யூரோ கோப்பை அனுபவம் மகிழ்ச்சி அளிக்கும்படியாக இல்லாமல் போனது.
 ஆச்சர்யம்...

 தனது முதல் இரு ஆட்டங்களில் தோல்வி கண்ட டென்மார்க் அணி, முக்கிய வீரரான கிறிஸ்டியன் எரிக்சன் இல்லாத நிலையிலும் அடுத்து வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி வரை முன்னேறி ஆச்சர்யமளித்தது. குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் தனது சொந்த மண்ணில் ரஷியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. நாக் அவுட் சுற்றில் வேல்ûஸ 4-0 என சுருட்டியது. காலிறுதியில் செக் குடியரசுக்கு 2-1 என்ற கோல் கணக்கில் செக் வைத்து அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் அதில் இங்கிலாந்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.
 சரிந்த மதிப்பு...

 ஒரு ஆட்டத்துக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பின்போது தன்முன்னே வைக்கப்பட்டிருந்த கோகா கோலா பாட்டில்கள் இரண்டை எடுத்து தள்ளி வைத்த போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தண்ணீரைப் பருகுமாறு அதை உயர்த்திக் காட்டினார். அவ்வளவு தான், கோகா கோலா நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு சுமார் ரூ.28,000 கோடி அளவுக்கு சரிந்தது. இத்தனைக்கும், அந்த நிறுவனம் யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் விளம்பரதாரர்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. கார்பனேட்டட் குளிர்பானங்களில் தனக்கு ஒவ்வாமை இருப்பதாக ரொனால்டோ தனது முந்தைய பேட்டிகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 புதுமை...

இந்த சீசனில் புதுமையாக இத்தாலி - இங்கிலாந்து மோதிய இறுதி ஆட்டம் உள்பட அனைத்து ஆட்டங்களிலும், ஒரு சிறிய விளையாட்டு கார் தான் பந்தை ஆடுகளத்துக்கு கொண்டு வந்து சேர்த்தது. ஃபோக்ஸ்வேகன் ரகத்தைச் சேர்ந்ததும், ரிமோட் கன்ட்ரோல் மூலமாக இயக்கக் கூடியதுமான அந்தக் கார், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதர ஆட்டங்களின்போது பல்வேறு வண்ணங்களில் இருந்த அந்தக் கார், இறுதி ஆட்டத்தின்போது 3-ஆம் பாலினத்தவர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வானவில் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com