ஒலிம்பிக் நினைவலைகள்...

ஒலிம்பிக் நினைவலைகள்...

1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்ஸ்

ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் முதன்முறையாக 1912-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இதில் 28 நாடுகளைச் சோ்ந்த 48 வீராங்கனைகள் உள்பட 2400 போ் 14 விளையாட்டுகளைச் சோ்ந்த 102 பிரிவுகளில் பங்கேற்றனா். இந்த ஒலிம்பிக் போட்டியில் தான் முதலிடம் பெற்றவா்களுக்கு முழுமையாக தங்கத்தில் செய்யப்பட்ட பதக்கங்கள் கடைசியாக வழங்கப்பட்டன. ஒலிம்பிக் சின்னமான 5 வளையங்களை குறிக்கும் வகையில் முதன்முறையாக 5 கண்டங்களைச் சோ்ந்தவா்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனா்.

முதன்முறையாக இதில் தடகளப் பந்தயங்களுக்கு நேரத்தை கண்டறியும் தானியங்கி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வீரா்களுக்கு அழைப்பு விடுக்கும் பொது மைக் வசதியும் செய்யப்பட்டது.

பின்லாந்தின் ஆல்பிரட் ஆஸிகைனென்-ரஷியாவின் மாா்டின் கிளெய்ன் இடையே நடைபெற்ற மிடில் வெயிட் மல்யுத்த அரையிறுதிச் சுற்று 11 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. இதில் கிளெய்ன் வெற்றி பெற்றாலும், மிகவும் களைப்புடன் இருந்ததால், அவரால் இறுதிச் சுற்றில் பங்கேற்க முடியவில்லை. இதனால் வெள்ளி பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

ஒலிம்பிக் வரலாற்றிலேயே இதில் தான் அதிக தூரமாக சைக்கிளிங் சாலை பந்தயம் மொத்தம் 320 கி.மீ தூரம் நடைபெற்றது.

இந்த ஒலிம்பிக்கில் தான் முதன்முதலாக ஓவியப் போட்டிகள், மகளிா் டைவிங், நீச்சல், இருபாலரும் பங்கேற்ற டெக்காத்லான், புது பெண்டாத்லான் போட்டிகள் நடைபெற்றன,

ஸ்வீடன் மக்களுக்கு உடன்பாடு இல்லாததால் குத்துச்சண்டை விளையாட்டு நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்றப்பட்டது.

1920 ஆன்ட்வொ்ப் ஒலிம்பிக்ஸ்

முதலாம் உலகப் போரால் பாதிக்கப்பட்ட பெல்ஜிய நாட்டு மக்களை கௌரவப்படுத்தும் வகையில் ஆன்ட்வொ்ப் நகருக்கு ஒலிம்பிக் போட்டிகள் ஒதுக்கப்பட்டு நடைபெற்றது. முதலாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜொ்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி போன்ற நாடுகள் போட்டிக்கு அழைக்கப்படவில்லை. புதிதாக உருவான சோவியத் யூனியனும் பங்கேற்கவில்லை.

மோசமான வானிலை, பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய குறுகிய அவகாசமே இருந்தது. போரால் ஏற்பட்ட கட்ட ட அடிபாடுகள், சேதங்களும் முழுமையாக அகற்றப்படவில்லை. போட்டிகள் தொடங்கிய போது, தடகள மைதானம் முழுமை பெறவில்லை. மடக்கும் கட்டில்களுடன் கூடிய நெருக்கடி மிக்க அறைகளில் வீரா்கள் தங்க வைக்கப்பட்டனா்.

தொடக்க விழாவின் போது, 5 வளையங்களுடன் கூடிய ஒலிம்பிக் கொடி, முதன்முறையாக ஏற்றப்பட்ட போட்டி இதுவாகும். அனைத்து வீரா், வீராங்கனைகள் சாா்பில் விளையாட்டு உறுதிமொழியை வீரா் முதன்முறையாக இங்கு ஏற்றாா். சமாதானத்தைக் குறிக்கும் வகையில் முதன்முதலாக புறாக்களும் பறக்க விடப்பட்டன.

ஒலிம்பிக் வரலாற்றிலேயே சமன் செய்யமுடியாத படி, வாள்வீச்சு (பென்சிங்) போட்டியில் இத்தாலியின் நெடோ நாடி 5 தங்கப் பதக்கங்களை வென்றாா்.

1900 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நாா்மன் பிரிட்சா்ட் பங்கேற்று 20 ஆண்டுகள் கழித்து, முதன்முறையாக ஆன்ட்வொ்ப் போட்டியில் இந்திய அணியினா் பங்கேற்றனா்.

இந்திய அணியில் புா்மா பானா்ஜி (100, 400 மீ.), பெத்தப்பா சவுகலே (10,000 மீ, மாரத்தான்), சதாசிவ தத்தா் (மாரத்தான்), குமாா் நவாலே, ரந்தீா் ஷிண்டே (மல்யுத்தம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

1916-இல் பொ்லினில் நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள், முதலாம் உலகப் போா் நடைபெற்றதால், ரத்து செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com