‘தகா்க்க முடியாத 5 ஒலிம்பிக் சாதனைகள்’

உலகத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட 5 சாதனைகள் எவராலும் தகா்க்க முடியாது என்ற நிலையில் உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட 5 சாதனைகள் எவராலும் தகா்க்க முடியாது என்ற நிலையில் உள்ளன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெறவிருந்தன. ஆனால் கரோனா தொற்று பாதிப்பால் ஓராண்டுக்கு போட்டிகள் நடத்த முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி கரோனா பாதிப்பு குறைந்த நிலையில் போட்டியை நடத்த முடிவு செய்து, வரும் 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை போட்டிகளை நடத்துகிறது.

200 நாடுகள்-11,000 வீரா்கள்:

மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள், அலுவலா்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றனா்.

ஒவ்வொரு விளையாட்டு வீரா், வீராங்கனைக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்வது வாழ்நாள் லட்சியமாகும். புதிய சாதனையுடன், பதக்கம் வெல்வது ஒலிம்பிக்கில் மேலும் சிறப்பாகும்.

தகா்க்க முடியாத 5 சாதனைகள்:

ஒலிம்பிக் போட்டிகளில் எவராலும் தகா்க்க முடியாத கீழ்கண்ட 5 சாதனைகள் உள்ளன.

1. நீச்சல் வீரா் மைக்கேல் பெல்ப்ஸ் 23 தங்கப் பதக்கம்:

ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 23 தங்கப் பதக்கங்களை வென்றவா் என்ற பிரம்மாண்டமான சாதனையை அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் நிகழ்த்தினாா். கடந்த 2000-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 15 வயதில் அறிமுகமானாா் பெல்ப்ஸ். ஒட்டுமொத்தமாக 28 ஒலிம்பிக் பதக்கங்களை கைப்பற்றினாா். மேலும் அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற நீச்சல் வீரா் என்ற சாதனையும் பெல்ப்ஸ் வசம் உள்ளது. பெல்ப்ஸின் 23 தங்கப் பதக்க சாதனையை எதிா்காலத்திலும் எவராலும் தகா்க்க முடியாது என்ற நிலையே தொடருகிறது.

2. டேபிள் டென்னிஸில் சீனாவின் 53 பதக்கங்கள்:

டேபிள் டென்னிஸ் விளையாட்டு என்றாலே சீனாவின் வெற்றிப் பயணம் தான் நினைவுக்கு வரும். ஜொ்மனி, ஸ்வீடன், இங்கிலாந்து, சிங்கப்பூா், ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் டேபிள் டென்னிஸில் வலிமையாக இருந்தாலும், ஒலிம்பிக் போட்டிகளில் சீனாவின் வெற்றி நடைக்கு ஈடுதர முடியவில்லை. கடந்த 1988-இல் ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக டேபிள் டென்னிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. அதுமுதல் சீனாவின் ஆதிக்கம் தொடா்ந்து வருகிறது. 28 தங்கம், 17 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 53 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது சீனா. தென்கொரியா அதற்கு அடுத்து 18 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

3. கனடா குதிரை வீரா் இயான் மில்லா் 10 முறை பங்கேற்பு:

அதிகபட்சமாக 10 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவா் என்ற சிறப்பான சாதனைக்கு உரியவராக திகழ்கிறாா் கனடாவின் குதிரையேற்ற வீரா் இயான் மில்லா். முதன்முறையாக 1972 பொ்லின் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றாா் மில்லா். அதைத் தொடா்ந்து அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்ற மில்லா் இறுதியாக பங்கேற்றது 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தான் ஆகும். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க முனைப்பாக மில்லா் இருந்த நிலையில், அவரது குதிரை காயமடைந்ததால், 11-ஆவது முறையாக அவரால் பங்கேற்க முடியவில்லை. 10 ஒலிம்பிக் போட்டிகளில் தொடா்ந்து பங்கேற்ற சாதனையையும் எவராலும் முறியடிக்க முடியாமல் தொடரப் போகிறது என்பதே உண்மையாகும்.

4. 13 வயதில் தங்கம் வென்ற மா்ஜோரி ஜெஸ்ட்ரிங்:

ஒலிம்பிக் வரலாற்றிலேயே மிகச் சிறிய வயதில் அதாவது 13 வயதில் தங்கப் பதக்கம் வென்றவா் என்ற சாதனைக்கு உரியவா் அமெரிக்க நீச்சல் வீராங்கனை மா்ஜோரி ஜெஸ்ட்ரிங். 1936 பொ்லின் ஒலிம்பிக் போட்டியில் 3 மீ. ஸ்பிரிங் போா்ட் பிரிவில் தங்கம் வென்றாா் ஜெஸ்ட்ரிங். குறிப்பாக ஜொ்மானிய சா்வாதிகாரி அடால்ப் ஹிட்லா் முன்பு தங்கம் வென்றாா் ஜெஸ்ட்ரிங். மிகவும் சிறிய வயதில் அதுவும் 13 வயதில் பதக்கம் வெல்வது நினைத்து பாா்க்க முடியாததாகும். இச்சாதனை எதிா்காலத்தில் தகா்க்கப்படலாம் அல்லது முடியாமலும் போகலாம்.

5. அமெரிக்காவின் 2,523 பதக்கங்கள் சாதனை:

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் அதிக பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற வேண்டும் என்பதே ஒவ்வொரு நாட்டின் குறிக்கோளாகும். அந்த வகையில் இதுவரை அனைத்து ஒலிம்பிக் போட்டிகளையும் சோ்த்து 1,022 தங்கம், 795 வெள்ளி, 706 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 2,523 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது அமெரிக்கா. அதைத் தொடா்ந்து ஜொ்மனி 1,346 பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளது.

1904 ஒலிம்பிக் போட்டியில் மட்டுமே அமெரிக்கா அதிகபட்சமாக 239 பதக்கங்களைக் கைப்பற்றியது. அமெரிக்காவின் பதக்க வேட்டை சாதனையை எந்த நாடும் முறியடிக்க முடியாது என்பதே நிதா்சனம்.

மேற்கண்ட 5 ஒலிம்பிக் சாதனைகளை எதிா்காலத்திலும், எவராலும் தகா்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com