ஒலிம்பிக்ஸ்: டோக்கியோவில் பயிற்சியைத் தொடங்கிய இந்திய வீரர்கள்

டென்னிஸ், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளும்...
ஒலிம்பிக்ஸ்: டோக்கியோவில் பயிற்சியைத் தொடங்கிய இந்திய வீரர்கள்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக டோக்கியோவுக்குச் சென்றுள்ள இந்திய வீரர்கள் இன்று முதல் தங்களுடைய பயிற்சிகளைத் தொடங்கியுள்ளார்கள். 

32-வது ஒலிம்பிக் போட்டி வரும் 23-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இந்தியத் தரப்பில் 228 போ் கொண்ட குழு ஒலிம்பிக்கில் பங்கேற்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் 22 மாநிலங்களைச் சேர்ந்த 119 போ் பங்கேற்கிறார்கள். இவர்களில் 67 வீரர்களும் 52 வீராங்கனைகளும் உள்ளார்கள். 18 விளையாட்டுகளில் 85 பதக்கங்கள் கொண்ட போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் நேத்ரா குமணன், வருண் ஏ. தக்கார், கே.சி. கணபதி, ஜி. சத்யன், ஷரத் கமல், சி.ஏ. பவானி தேவி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், எஸ். தனலட்சுமி, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி என 11 தமிழக வீரர்கள் பங்கேற்கிறார்கள். 

முதற்கட்டமாக 88 போ் கொண்ட இந்திய குழு, சனிக்கிழமை புதுதில்லியில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை டோக்கியோ வந்தடைந்தது,. அவா்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் நரீந்தா் பத்ரா, செயலா் ராஜீவ் பாட்டியா ஆகியோா் வழியனுப்பினா். ஏற்கெனவே குரோஷியாவில் பயிற்சி பெற்று வந்த இந்திய துப்பாக்கி சுடும் அணியினா் டோக்கியோ வந்து விட்டனா். ஞாயிற்றுக்கிழமை டோக்கியோ வந்த அணியில் வில்வித்தை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஹாக்கி, ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் வீரா், வீராங்கனைகள் அடங்குவா்.

இந்திய வீரர்கள் டோக்கியோவில் தங்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள். வில்வித்தை விளையாட்டைச் சேர்ந்த அடானு தாஸ் - தீபிகா குமாரி தம்பதி டோக்கியோவில் தங்களுடைய பயிற்சியை இன்று மேற்கொண்டார்கள். ஜூலை 23 முதல் வில்வித்தைப் போட்டிகள் தொடங்குகின்றன. தீபிகா குமாரி தனது 3-வது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். இதேபோல டென்னிஸ், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளும் தங்களுடைய பயிற்சிகளை இன்று முதல் தொடங்கியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com