இலங்கை ஒருநாள் தொடர்: அதிரடி ஆட்டத்தில் அசத்தும் புதிய வீரர்கள்

இங்கிலாந்து அணி போல இந்திய அணியாலும் 50 ஓவர் முழுக்க அதிரடியாக விளையாடி...
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

இந்திய ஒருநாள் அணியில் விளையாடும் புதிய வீரர்கள் தங்களுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 262/9 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய இந்திய அணி 263/3 ரன்களை எடுத்து வென்றது. கேப்டன் தவான் ஆட்டமிழக்காமல் 86 ரன்களை எடுத்தார். 

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அதிகக் கவனம் ஈர்த்துள்ளார்கள் பிரித்வி ஷா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும்.

பிரித்வி ஷா தனது 4-வது ஒருநாள் ஆட்டத்தை நேற்று விளையாடினார். இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு நேற்றுதான் அறிமுகமானார்கள்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் புதிதாக இடம்பிடித்துள்ள மூவரும் தங்களுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்களை விளாசினார். 33 பந்துகளில் தனது அரை சதத்தைக் கடந்த அறிமுக வீரர் இஷான் கிஷன், 2 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்றொரு அறிமுக வீரரான சூர்யகுமார் யாதவ், வந்த வேகத்தில் விரைவாக ரன்கள் எடுத்தார். 20 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து அணி போல இந்திய அணியாலும் 50 ஓவர் முழுக்க அதிரடியாக விளையாடி அதிக ஸ்கோர்களை எடுக்க முடியும் என்கிற புதிய நம்பிக்கையை இம்மூவரும் ஏற்படுத்தியுள்ளார்கள். 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி எப்படி விளையாடும் என்பதை இந்த மூவருடைய பேட்டிங்கும் வெளிப்படுத்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

புதிய வீரர்களின் அதிரடி ஆட்டம்

இஷான் கிஷன்
இஷான் கிஷன்

பிரித்வி ஷா - 43 ரன்கள் (24 பந்துகள்), 9 பவுண்டரிகள், ஸ்டிரைக் ரேட் - 179.16
இஷான் கிஷன் - 59 ரன்கள் (42 பந்துகள்), 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள், ஸ்டிரைக் ரேட் - 140.47
சூர்யகுமார் யாதவ் - 31 ரன்கள் (20 பந்துகள்), 5 பவுண்டரிகள், ஸ்டிரைக் ரேட் - 155.00

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com