கடைசி டி20யில் 'த்ரில்' வெற்றி: தொடரை வென்றது இங்கிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை வென்றது.
கடைசி டி20யில் 'த்ரில்' வெற்றி: தொடரை வென்றது இங்கிலாந்து


பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை வென்றது.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய முகமது ரிஸ்வான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 57 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக ஃபகார் ஸமான் 24 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

155 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடி தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில் பட்லர் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடி காட்டி விளாசி வந்த ராய் அரைசதம் அடித்து 36 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.

அதன்பிறகு டேவிட் மலான் 31 ரன்கள் எடுத்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதேஓவரில் லியாம் லிவிங்ஸ்டன் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து கேப்டன் இயான் மார்கன் 12 பந்துகளில் 21 ரன்களுக்கு கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது.

எனினும் கிறிஸ் ஜோர்டன் இங்கிலாந்து வெற்றியை உறுதி செய்தார்.

19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆட்டநாயகன் விருதை ஜேசன் ராயும், தொடர்நாயகன் விருதை லியாம் லிவிங்ஸ்டனும் தட்டிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com