ஸ்டார்க் வேகத்தில் வீழ்ந்தது மே.இ. தீவுகள்: ஆஸி. வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் மிட்செல் ஸ்டார்கின் மிரட்டல் வேகத்தால் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் மிட்செல் ஸ்டார்கின் மிரட்டல் வேகத்தால் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் பார்படாஸில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் அலெக்ஸ் கேரி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ஜோஷ் பிலிப்பி 39 ரன்களும், பென் மெக்டெர்மாட் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றும் மொய்சஸ் ஹென்ரிகஸ் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதன்பிறகு கேப்டன் கேரி மற்றும் ஆஷ்டன் டர்னர் பாட்னர்ஷிப் அமைத்தனர்.

இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதம் அடித்த கேரி 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டர்னரும் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து 1 ரன்னில் அரைசதத்தைத் தவறவிட்டார்.

மழை காரணமாக ஆட்டம் 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 49 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஹேடன் வால்ஷ் 5 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன்களை மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் திணறடித்தனர். இதனால், பேட்ஸ்மேன்களில் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

27 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்தியத் தீவுகள் தத்தளித்துக் கொண்டிருந்தது.

ஆனால், கேப்டன் கைரன் பொல்லார்ட் அதிரடி காட்டி நெருக்கடியை எதிரணி பக்கம் திருப்பினார். அவர் அரைசதமும் அடித்தார்.

இந்த நிலையில் பொல்லார்டுக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடி வந்த அல்சாரி ஜோசப் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பொல்லார்டும் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

26.2 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா மற்றும் மிட்செல் மார்ஷ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com