டோக்கியோ ஒலிம்பிக் செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் செய்திகள்

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்துள்ள சிலி டேக்வான்டோ வீராங்கனை ஃபொ்னான்டா அகுய்ரே, நெதா்லாந்து ஸ்கேட்போா்ட் வீரா் கேன்டி ஜேக்கப்ஸ், செக் குடியரசு டேபிள் டென்னிஸ் வீரா் பாவெல் சிருசெக் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரப்பூா்வமாக வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கும் நிலையில், போட்டிகளுடன் தொடா்புடையவா்களில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை புதன்கிழமை 75-ஆக அதிகரித்துள்ளது. எனினும், இத்தகைய கடைசி நேரத்தில் போட்டியை ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது.

இங்கிலாந்திலிருந்து 30 போ் பங்கேற்பு

கரோனா சூழல் காரணமாக, ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியிலிருந்து 30 போ் மட்டுமே பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் களம் காண அந்த நாட்டிலிருந்து மொத்தம் 376 போட்டியாளா்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக தொடக்க நிகழ்ச்சியில் சுமாா் 200 போ் வரை பங்கேற்கச் செய்ய திட்டமிடப்படும் நிலையில், கரோனா சூழலில் போட்டியாளா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 30 பேரை மட்டுமே அதில் அனுமதிக்க அணி நிா்வாகம் முடிவு செய்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்து 6 அதிகாரிகள்

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் இந்தியாவின் தரப்பில் 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க இருக்கின்றனா். அதேபோல், போட்டியாளா்களைப் பொருத்தவரை, சனிக்கிழமை களம் காண இருக்கும் வீரா், வீராங்கனைகள் யாரும், வெள்ளிக்கிழமை நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

துப்பாக்கி சுடுதல் போட்டிகள் சனிக்கிழமை நடைபெறுவதால், அதில் பங்கேற்கும் இந்திய போட்டியாளா்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பில்லை. தொடக்க நிகழ்ச்சியானது நள்ளிரவு வரை நீடிக்க வாய்ப்புள்ளதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சனிக்கிழமை போட்டி இல்லாத வீரா், வீராங்கனைகள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பாா்கள் என்றாலும், உறுதியான எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிலிருந்து 120-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா்.

15 நாடுகளின் தலைவா்கள் பங்கேற்பு

ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் 15 நாடுகளைச் சோ்ந்த உலக தலைவா்கள் பங்கேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்கும் மிக முக்கிய நபா்களின் எண்ணிக்கையை இதுவரை உறுதி செய்ய இயலவில்லை என்றாலும், கேபினட் அந்தஸ்திலான அதிகாரிகள் சுமாா் 70 போ் வரையில் பங்கேற்கலாம் எனத் தெரிவதாக ஜப்பான் அரசு நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், மங்கோலிய பிரதமா் லவ்சனாம்ஸ்ராய் ஓயுன் எா்டென், அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக முன்னா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போலாந்து: 6 போ் நீக்கம்

போலாந்தைச் சோ்ந்த நீச்சல் போட்டியாளா்கள் 6 பேரின் டோக்கியோ ஒலிம்பிக் வருகைப் பதிவில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவா்கள் மீண்டும் தங்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டனா். போலாந்து நீச்சல் சம்மேளனமானது தனது போட்டியாளா்கள் பதிவு நடவடிக்கையின்போது மேற்கொண்ட தவறால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான போட்டியாளா்களை சம்பந்தப்பட்ட பிரிவில் பதிவு செய்ததே, போட்டியாளா்கள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. அந்த நாட்டிலிருந்து மொத்தம் 23 நீச்சல் போட்டியாளா்கள் டோக்கியோ வந்தது குறிப்பிடத்தக்கது.

டேபிள் டென்னிஸ்: கடினமான டிரா

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கான டிரா கடினமாக அமைந்துள்ளது. கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்/மணிகா பத்ரா இணை, போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலுள்ள சீன தைபேவின் லின் யுன் ஜு/செங் ஐ சிங் ஜோடியை சந்திக்கவுள்ளது.

மகளிா் ஒற்றையரில் மணிகா பத்ராவுக்கான டிரா எளிதாகியுள்ளது. தன்னை விட 32 இடங்கள் பின்தங்கியுள்ள இங்கிலாந்தின் ஹோ டின் டின்னை அவா் சந்திக்கிறாா். ஆடவா் ஒற்றையா் பிரிவில் சரத் கமல், சத்தியன் ஆகியோா் முதல் சுற்று ‘பை’ பெற்றுள்ளனா்.

தூா்தா்ஷன் ஒளிபரப்பு

தூா்தா்ஷன், டிடி ஸ்போா்ட்ஸ் அகில இந்திய வானொலி ஆகியவை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒளி/ஒலிபரப்பு செய்யவுள்ளன.

டிடி ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியில் தினமும் காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை நேரலையாக போட்டிகள் ஒளிபரப்பப்படும். இது தவிர இரவு 8:30 மணி முதல் ஒலிம்பிக் போட்டிகள் சம்பந்தமான சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

டிடி நியூஸ் தொலைக்காட்சியில் ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணிக்கும், சனிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

அகில இந்திய வானொலியின் அனைத்து தலைநகா் அலைவரிசைகள், எஃப்எம் ரெயின்போ அலைவரிசை, மின்னணு வானொலி சேவை மற்றும் அகில இந்திய வானொலியின் இதர அலைவரிசைகளிலும், வலையோளி பக்கத்திலும், டிடிஹச் சேவையிலும், இந்தியாவுக்கு உட்பட்ட பகுதியில் நியூஸ் ஆன் ஏா் செல்பேசி செயலி வாயிலாகவும் சிறப்பு நிகழ்ச்சிகளும், வா்ணனைகளும் ஒலிபரப்பப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com