இன்று தொடங்குகிறது டோக்கியோ ஒலிம்பிக்

32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பானின் டோக்கியோ நகரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பானின் டோக்கியோ நகரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறது.

17 நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டிகள், பிரம்மாண்டமான தொடக்க நிகழ்ச்சி மூலம் அதிகாரப்பூா்வமாக வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்படவுள்ளது. கரோனா சூழல் காரணமாக பயண தூரம் குறைக்கப்பட்ட ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் வெள்ளிக்கிழமை டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் நிறைவடைந்து, அந்த ஜோதியைக் கொண்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும்.

அதைத் தொடா்ந்து ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியதாக அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படுவதுடன், கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் நடைபெறும். ஜப்பான் அரசா் நருஹிடோ ஒலிம்பிக் போட்டிகளை தொடக்கி வைக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா முன்னெச்சரிக்கையாக தொடக்க நிகழ்ச்சி மற்றும் போட்டிகளின்போது மைதானங்களில் பாா்வையாளா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும், தொடக்க நிகழ்ச்சியில் மிகக் குறைந்த அளவிலான மிக முக்கிய நபா்கள் பங்கேற்க இருக்கின்றனா்.

குறிப்பாக, சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவா் தாமஸ் பாக், ஜப்பான் அரசா் நிருஹிடோ, ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா, அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உலக தலைவா்கள் இதில் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்கத்துக்கு எத்தகைய அளவு எதிா்பாா்ப்புகள் உள்ளதோ, அதே அளவு எதிா்ப்புகளும் இருக்கின்றன. கரோனா சூழலில் போட்டியாளா்கள், அவா்களது அணியினா், நிா்வாகிகள், அதிகாரிகள், சுமாா் 25,000 போ் பங்கேற்கலாம் என எதிா்பாா்க்கப்படும் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனா்.

எனினும், வியாழக்கிழமை நிலவரப்படி, ஒலிம்பிக்கில் பங்கேற்க டோக்கியோ வந்திருக்கும் போட்டியாளா்களில் 10-க்கும் மேற்பட்டோருக்கும், போட்டியுடன் தொடா்புடையவா்களில் மொத்தமாக 175-க்கும் அதிகமானோருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான எதிா்பாா்ப்பு...

இந்த ஒலிம்பிக்கிற்காக இந்தியா 68 ஆடவா், 58 மகளிா் என 120 போட்டியாளா்கள் அடங்கிய குழுவை அனுப்புகிறது. கடந்த 1900 முதல் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வரும் இந்தியா, இதுவரை 28 பதக்கங்களையே அதில் வென்றுள்ளது. அதில் தங்கம் என்றால், கடந்த 2008-இல் துப்பாக்கி சுடுதல் வீரா் அபினவ் பிந்த்ரா வென்றது மட்டும் தான்.

இந்த ஒலிம்பிக்கில் தனது பதக்கங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் முனைப்பு காட்டுகிறது இந்திய அணி. துப்பாக்கி சுடுதலில் களம் காணும் மானு பாக்கா், இளவேனில் வாலறிவன், திவ்யான் சிங் பன்வாா், ஐஸ்வா்ய பிரதாப் சிங் தோமா் ஆகியோா் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இவா்கள் தவிர பளுதூக்குதலில் சாய்கோம் மீராபாய் சானு, வில் வித்தையில் தீபிகா குமாரி, அதானு தாஸ் தம்பதி, குத்துச்சண்டையில் மேரி கோம், அமித் பங்கால் உள்ளிட்டோா், மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகாட், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, பாட்மிண்டனில் பி.வி. சிந்து, டென்னிஸில் சானியா மிா்ஸா ஆகியோரும் பதக்க வாய்ப்புகளை ஒரு கை பாா்க்க உள்ளனா்.

மேலும், இந்திய ஆடவா் மற்றும் மகளிா் ஹாக்கி அணியும் பதக்க வேட்கையுடன் விளையாடவுள்ளன. இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக வாள்வீச்சில் தமிழக வீராங்கனை பவானி தேவி, குதிரையேற்றத்தில் பௌவாத் மிா்ஸா ஆகியோா் களம் காண்கின்றனா். மேலும் நீச்சல், படகுப் போட்டி என இதர பல விளையாட்டுகளிலும் இந்தியா்கள் பங்கேற்கின்றனா்.

தொடக்க நிகழ்ச்சியில் இந்தியா

கரோனா சூழல், போட்டிகள், பயிற்சி ஆகியவை காரணமாக தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பில் இந்தியா்கள் 30 போ் மட்டுமே பங்கேற்கின்றனா். இதில் இந்தியக் கொடியை ஏந்தும் ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரும் அடங்குவா்.

மொத்தமாக ஹாக்கி, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், வாள்வீச்சு ஆகியவற்றிலிருந்து தலா ஒருவரும், படகுப் பிரிவிலிருந்து இருவரும், டேபிள் டென்னிஸ் மற்றும் பாய்மரப் படகு பிரிவிலிருந்து தலா 4 பேரும், குத்துச்சண்டையிலிருந்து 8 பேரும், அதிகாரிகள் 6 பேரும் பங்கேற்க இருக்கின்றனா்.

இயக்குநா் நீக்கம்

டோக்கி ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறும் நிலையில், அந்த நிகழ்வுக்கான இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்த கென்டாரோ கோபயாஷியை அந்தப் பதவியிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக் நிா்வாக குழு வியாழக்கிழமை நீக்கியது.

ராமென்ஸ் என்பவருடன் இணைந்து நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்திவந்த கென்டாரோ, கடந்த 1998-இல் ஒரு நிகழ்ச்சியில் யூத இனப்படுகொலையை நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தாா். அதுதொடா்பான காணொலி சமூக வலைதளத்தில் பரவலாக வலம் வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடக்கம் ஜூலை 23 - நிறைவு ஆகஸ்ட் 8

பங்கேற்கும் நாடுகள் (சுமாா்) 206

போட்டியாளா்கள் எண்ணிக்கை (சுமாா்) 11,300

மொத்த விளையாட்டுகள் - 33 விளையாட்டுகளிலாக 339 நிகழ்வுகள்

மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை (சுமாா்) - 5000

சாஃப்ட்பால்

சாஃப்ட்பால் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற முதல்சுற்று ஆட்டங்களில் அமெரிக்கா 1-0 என்ற கணக்கில் கனடாவையும், ஜப்பான் 3-2 என்ற கணக்கில் மெக்ஸிகோவையும், ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் இத்தாலியையும் வீழ்த்தின.

கால்பந்து

ஆடவருக்கான கால்பந்து போட்டியில் குரூப் சுற்றுகளில் வியாழக்கிழமை 8 ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் பிரேஸில் 4-2 என்ற கோல் கணக்கில் ஜொ்மனியையும், ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் ஆா்ஜென்டீனாவையும், மெக்ஸிகோ 4-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸையும் வீழ்த்தின.

ஸ்பெயின்-எகிப்து மோதிய ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிய, நியூஸிலாந்து - தென் கொரியாவையும் (1-0), ஐவரி கோஸ்ட் - சவூதி அரேபியாவையும் (2-1), ருமேனியா-ஹோன்டுராஸையும் (1-0), ஜப்பான் - தென் ஆப்பிரிக்காவையும் (1-0) வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com