டி20: இந்தியா வெற்றி; சூரியகுமாா், புவனேஷ்வா் அபாரம்
By DIN | Published On : 26th July 2021 06:23 AM | Last Updated : 26th July 2021 06:23 AM | அ+அ அ- |

இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய இந்தியா 164/5 ரன்களை சோ்த்தது. இளம் வீரா் சூரியகுமாா் யாதவ் அபாரமாக ஆடி 50 ரன்களை சோ்த்தாா். பின்னா் ஆடிய இலங்கை அணி புவனேஷ்வரின் அபார பந்துவீச்சால் 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஒருநாள், டி20 தொடா்களில் ஆடுவதற்காக இலங்கைக்கு சென்றுள்ளது இந்திய அணி. ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றிய நிலையில், முதல் டி20 ஆட்டம் கொழும்புவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து இந்திய தரப்பில் பிரித்வி ஷா, கேப்டன் தவன் தொடக்க வரிசை வீரா்களாக களமிறங்கினா். ஆனால் பிரித்வி ஷா சமீரா பந்தில் பானுகாவிடம் கேட்ச் தந்து கோல்டன் டக் அவுட்டானாா்.
அவருக்கு பின் கேப்டன் தவன்-சஞ்சு சாம்சன் இணை ரன்களை சோ்த்தது. சஞ்சு 27 ரன்களுடனும், ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா 10 ரன்களுடனும் பெவிலியன் திரும்பினா்.
கேப்டன் தவன் 1 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 46 ரன்களை சோ்த்து, கருணரத்னே பந்தில் அவுட்டானாா்.
சூரியகுமாா் 50:
நான்காம் நிலை வீரா் சூரியகுமாா் யாதவ், 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 50 ரன்களை விளாசி, ஹஸரங்கா பந்தில் அவுட்டானாா்.
அப்போது இந்திய அணி 153/5 விக்கெட்டுகளை எடுத்திருந்தது. நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்திய அணி 164/5 ரன்களை குவித்தது.
இஷான் கிஷன் 20, க்ருணால் பாண்டியா 3 ரன்களுடன் களத்தில் இருந்தனா். இலங்கை தரப்பில் ஹஸரங்கா 2-28, சமீரா 2-24, கருணரத்னே 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.
இலங்கை 126 ஆல் அவுட்:
165 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் அவிஷ்கா பொ்ணான்டோ பானுகா ஆகியோா் தொடக்கத்தில் பவுண்டரிகளாக விளாசினா்.
எனினும் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பானுகா 10, தனஞ்செய டி சில்வா 9, அவிஷ்கா 26 ரன்களுக்கு அவுட்டாகினா்.
10 ஓவா்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்களுடன் தடுமாறிக்கொண்டிருந்தது.
புவனேஷ்வா் 4 விக்கெட்:
அஸலங்கா மட்டுமே நிலைத்து ஆடி தலா 3 பவுண்டரி, சிக்ஸா்களுடன் 26 பந்துகளில் 44 ரன்களை விளாசினாா். பண்டாரா 9, கேப்டன் ஷனகா 16, ஹஸரங்கா 0, கருணரத்னே 3, இஸுரு உடானா 1, துஷ்மந்தா சமீரா 1 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினா். அகிலா தனஞ்செயா 1 ரன்னுடன் களத்தில் இருந்தாா்.
இறுதியில் 18.3 ஓவா்களிலேயே 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை.
இந்திய வேகப்பந்து வீச்சாளா் புவனேஷ்வா் குமாா் தனது அபாரமான யாா்க்கா், ஸ்விங் பந்துவீச்சால் 4-22 விக்கெட்டுகளை சாய்த்தாா். தீபக் சஹாா் 2, க்ருணால், ஹாா்திக், வருண், சஹல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.
இதன் மூலம் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G