மற்றொரு டென்னிஸ் போட்டியிலிருந்தும் விலகிய ஒசாகா: விம்பிள்டனில் கலந்துகொள்வாரா?

பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு அடுத்ததாக பெர்லின் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார் பிரபல வீராங்கனையான ஒசாகா.
மற்றொரு டென்னிஸ் போட்டியிலிருந்தும் விலகிய ஒசாகா: விம்பிள்டனில் கலந்துகொள்வாரா?

பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு அடுத்ததாக பெர்லின் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார் பிரபல வீராங்கனையான ஒசாகா.

நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஒசாகா, சமீபத்தில் 2020 யு.எஸ். ஓபன் மற்றும் 2021 ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்றார்..

செய்தியாளர் சந்திப்பினால் தனக்கு மன அழுத்தம் ஏற்படுவதால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்க்கவுள்ளதாக அவர் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரெஞ்சு ஓபன் போட்டி நிர்வாகம், ஒசாகாவின் நடவடிக்கைக்கு 15,000 டாலர் அபராதம் விதித்தது. முதல் சுற்று வெற்றிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்ததால் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்தால் விளைவுகள் ஏற்படும் என்றும் பிரெஞ்சு ஓபன் உள்ளிட்ட நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் நிர்வாகங்களும் எச்சரித்தன.

இதையடுத்து தன்னால் கவனச்சிதறல் ஏற்பட வேண்டாம் என்று கூறி இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகினார் ஒசாகா. மன அழுத்தம் ஏற்படுவதால் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்க்க நினைத்தேன். பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து நான் விலகுவதால் மற்ற வீரர்கள் விளையாட்டில் கவனம் செலுத்த முடியும். யு.எஸ். ஓபன் 2018 முதல் மன அழுத்தத்தால் பாதிப்படைந்துள்ளேன். அதைச் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். பொதுவெளியில் என்னால் இயல்பாகப் பேச முடியாது. செய்தியாளர் சந்திப்புக்கு முன்பு எனக்குப் பதற்றம் ஏற்படுகிறது. அதனால் தான் பிரெஞ்சு ஓபன் போட்டியில் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்க்க நினைத்தேன். சரியான நேரத்தில் போட்டி நிர்வாகங்களுடன் இதுபற்றி விவாதிப்பேன் என்று தன் விலகலுக்கு அவர் விளக்கம் அளித்தார். 

இந்நிலையில் ஜூன் 14 முதல் தொடங்கவுள்ள பெர்லின் போட்டியிலிருந்தும் ஒசாகா விலகியுள்ளார். பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகிய ஒசாகா, நேராக அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார். தற்போது இரு போட்டிகளில் இருந்து விலகியுள்ளதால் ஜூன் 28 முதல் தொடங்கவுள்ள விம்பிள்டன் போட்டியில் ஒசாகா கலந்துகொள்வாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

விளையாட்டு வணிகப் பத்திரிகையான ஸ்போர்டிகோ சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஒரு வருடத்தில் ரூ. 400 கோடி (55.2 மில்லியன் டாலர்) வருமானம் ஈட்டியுள்ளார் 23 வயது ஒசாகா. இதில் 37.68 கோடி (5.2 மில்லியன் டாலர்), டென்னிஸ் போட்டிகளில் கிடைத்த பரிசுத்தொகையாகக் கிடைத்துள்ளது. இதர வருமானம் விளம்பரங்கள் வழியாகக் கிடைத்துள்ளன. இதனால் அதிக வருமானம் ஈட்டும் வீராங்கனை என்கிற பெருமையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com