கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய அணி வீரர்கள்: காரணம் என்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகிறார்கள். 
கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய அணி வீரர்கள்: காரணம் என்ன?


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகிறார்கள். 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18 முதல் தொடங்கியுள்ளது. சௌதாம்ப்டனில் நேற்று மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானது. எனினும் இந்த டெஸ்டில் கூடுதலாக ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மழையால் ஆட்ட முடிவில் பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மழை இல்லாததால் ஆட்டம் சரியான நேரத்தில் தொடங்கியுள்ளது. இன்று 98 ஓவர்கள் வீசப்படவுள்ளன.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளருக்கு இடமில்லை.

இந்நிலையில் இந்திய முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய முன்னாள் தடகள வீரர் மில்கா சிங், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். 91 வயது மில்கா சிங், ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்கு முறை தங்கப் பதக்கங்களை வென்றவர். 400 மீ. ஓட்டத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற ஒரே வீரர். 1960 ரோம் ஒலிம்பிக்ஸ் போட்டியில் 400 மீ. ஓட்டத்தில் 4-ம் இடம் பிடித்து பதக்கத்தைத் தவறவிட்டார். 400 மீ. ஓட்டத்தில் குறைந்த நேரத்தில் ஓடி முடிந்த அவருடைய தேசிய சாதனை 38 வருடங்களுக்குப் பிறகே முறியடிக்கப்பட்டது. 1959-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com