மிரட்டும் நியூசி. பந்துவீச்சு: 98 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 130/5

இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.
ஆட்டமிழந்த புஜாரா
ஆட்டமிழந்த புஜாரா


நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் கடைசி நாளன்று உணவு இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.

சௌதாம்டனில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் முதல் நாள், மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது. 2-வது நாளில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுக்க, வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்னதாக முடிக்கப்பட்டது. சனிக்கிழமையன்று இந்தியா 89 ஓவா்களில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அன்றைய தினமும் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னதாகவே முடிக்கப்பட்டபோது நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. 4-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

நேற்று, நியூசிலாந்தை முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது இந்தியா. அந்த அணியின் பேட்டிங் வரிசையை ஷமி, இஷாந்த் தங்களது வேகத்தால் சரித்தனா். நியூசிலாந்தின் முக்கிய விக்கெட்டாக இருந்த கேன் வில்லியம்சனை 49 ரன்களில் இஷாந்த் வீழ்த்தினாா். முதல் இன்னிங்ஸில் நியூசி. அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது. ஷமி நான்கு விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 5-ம் நாள் இறுதியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்தது. 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது. 

மழையால் இரு நாள் ஆட்டங்கள் பாதிக்கப்பட்டதால் கூடுதல் நாளான இன்றும் இந்த ஆட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. 

கடைசி நாளான இன்று கோலியும் புஜாராவும் நம்பிக்கையுடன் விளையாடத் தொடங்கினார்கள். ஆனால் ஜேமிசனின் மிரட்டலான பந்துவீச்சில் திடீரென நிலைகுலைய ஆரம்பித்தது இந்திய அணி. கோலி 13 ரன்களில் மீண்டும் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். புஜாரா 14 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு ரஹானேவும் ரிஷப் பந்தும் நன்கு விளையாட ஆரம்பித்தார்கள். ஆனால் லெக் சைட் பக்கம் வந்த பந்தை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ரஹானா. ரிஷப் பந்த் கொடுத்த ஒரு கேட்ச்சை செளதி நழுவவிட்டார். இதனால் அவ்வப்போது அதிரடியாக விளையாட முயன்று பவுண்டரிகள் அடித்தார் பந்த்.

கடைசி நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பந்த் 28, ஜடேஜா 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 98 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் இன்றைய நாளின் கடைசி இரு பகுதிகளும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com