இந்தியா 170 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: நியூசிலாந்துக்கு 139 ரன்கள் இலக்கு

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா 170 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: நியூசிலாந்துக்கு 139 ரன்கள் இலக்கு


நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம், நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன. 

கூடுதல் நாளான இன்றைய (புதன்கிழமை) உணவு இடைவேளையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 28 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நியூசிலாந்து பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால், இந்திய அணியால் துரிதமாக ரன் சேர்க்க முடியவில்லை. தாக்குப்பிடித்து விளையாடி வந்த ஜடேஜா 16 ரன்களுக்கு நீல் வேக்னர் பந்தில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, அதிரடியாக ஆட முயற்சித்து வந்த ரிஷப் பந்த் சற்று நேரத்தில் 41 ரன்களுக்கு டிரென்ட் போல்ட் வேகத்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

முகமது ஷமி வந்த வேகத்தில் 3 பவுண்டரிகளை விளாசினாலும், டிம் சௌதி வேகத்தில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஜாஸ்பிரீத் பூம்ராவும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதனால், இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து தரப்பில் சௌதி 4 விக்கெட்டுகளையும், போல்ட் 3 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும், வேக்னர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 32 ரன்கள் முன்னிலை வகித்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற அந்த அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் குறைந்தபட்சம் 53 ஓவர்கள் வீசப்படவுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com