தொடரும் வேதனை: 18 வருடங்களாக ஐசிசி போட்டியில் நியூசிலாந்தைத் தோற்கடிக்கத் திணறும் இந்திய அணி!

ஐசிசி போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எப்போதும் சவாலான அணியாக இருந்து வருகிறது. 
தொடரும் வேதனை: 18 வருடங்களாக ஐசிசி போட்டியில் நியூசிலாந்தைத் தோற்கடிக்கத் திணறும் இந்திய அணி!

2003-க்குப் பிறகு கடந்த 18 வருடங்களாக ஐசிசி போட்டியில் நியூசிலாந்து அணியைத் தோற்கடிக்க முடியாமல் திணறி வருகிறது இந்திய அணி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலாவது இந்த நிலை மாறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்தியாவை நியுசிலாந்து மீண்டும் தோற்கடித்துள்ளது.

ஐசிசி போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எப்போதும் சவாலான அணியாக இருந்து வருகிறது. 

கடைசியாக 2003 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் கங்குலி தலைமையிலான இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது. அதன்பிறகு ஐசிசி போட்டியில் நியூசிலாந்தை இந்திய அணி எதிர்கொண்டபோதெல்லாம் தோல்வியே கிடைத்துள்ளது. 

2007-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்திடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்திய அணி.

2016-ல் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்தை 126/7 ரன்களுக்குக் கட்டுப்படுத்தியது இந்திய அணி. ஆனால் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் அற்புதமாகப் பந்துவீசி இந்திய அணியை 79 ரன்களுக்குள் சுருட்டியதால் அந்த அணிக்கு அற்புதமான வெற்றி கிடைத்தது.

2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தை யாரால் மறக்க முடியும்? முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 239 ரன்கள் எடுத்தது. இருநாள்கள் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 221 ரன்கள் மட்டும் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதற்கு முன்பு லீக் சுற்றில் இரு அணிகளும் விளையாட இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 

இதுதவிர உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்தில் இந்திய அணி விளையாடியபோது இரு டெஸ்டுகளிலும் மோசமாகத் தோற்றது.

இதனால் ஐசிசி போட்டி என்றாலே நியூசிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்த தயாராக இருக்கும் என்கிற எண்ணம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த 18 வருட ஏக்கத்தை கோலி தலைமையிலான இந்திய அணி போக்கும், ஐசிசி போட்டியில் நியூசிலாந்தை இந்திய அணியால் வீழ்த்த முடியும் என்பதை கோலி படை நிரூபித்துக் காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் செளதாம்படனில் இரு நாள்களுக்கு மழை முழுவதுமாக உதவியும் நியூசிலாந்திடம் இந்திய அணி தோற்பதை கோலியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. டெஸ்ட் கிரிக்கெட்டின் 144 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது நியூசிலாந்து.

அடுத்ததாக இந்த வருடமும் அடுத்த வருடமும் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. 2023-ல் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. அடுத்தடுத்து நடைபெறவுள்ள மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளிலும் நியூசிலாந்தை இந்திய அணி எதிர்கொள்ளும்போது புதிய முடிவுகள் கிடைக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com