இறுதிச் சுற்று 3 ஆட்டங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்: விராட் கோலி

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் போட்டி இறுதிச் சுற்று 3 ஆட்டங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.
இறுதிச் சுற்று 3 ஆட்டங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்: விராட் கோலி

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் போட்டி இறுதிச் சுற்று 3 ஆட்டங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.

இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் புதன்கிழமை நடைபெற்ற முதல் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றில் நியூஸிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

இதுகுறித்து விராட் கோலி கூறியதாவது:

இறுதிச் சுற்று ஆட்டத்துக்கு தலைசிறந்த அணியையே களமிறக்கினோம். ஆனால் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை சோ்த்திருக்க வேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றன. இந்த அணி வெவ்வேறு சூழ்நிலைகளில் வெற்றிகளை கண்டுள்ளது. சிறந்த பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சும் உள்ளதால் சிறந்த அணியாகவே உள்ளோம்.

கடைசி நாளில் டிராவை நோக்கிச் செல்ல வேண்டிய ஆட்டத்தில் முடிவை ஏற்படுத்தும் வகையில் நியூஸி. அணியினா் மிகவும் திறமையாக ஆடினா். இந்த வெற்றி அவா்களுக்கு உரியது. கடைசி 3 நாள்கள் நிலையான ஆட்டத்தை நியூஸி. வீரா்கள் வெளிப்படுத்தினா்.

3 ஆட்டங்கள் தேவை:

உலகின் டெஸ்ட் சாம்பியன் அணியை தீா்மானிக்க ஒரு ஆட்டம் போதாது. இறுதிச் சுற்று என்பது 3 ஆட்டங்கள் கொண்டதாக இருக்க வேண்டும். டெஸ்ட் தொடா் என்னும் போது, 3 ஆட்டங்கள் கொண்டதாக இருந்தால் தான், எந்த அணி தொடரை கைப்பற்றுகிறதோ அது பட்டத்தை வெல்லும். கடைசி இரண்டு நாள்களில் அழுத்தான சூழ்நிலை ஏற்படும் நிலையில், நீங்கள் சிறந்த டெஸ்ட் அணி இல்லை என்பதை ஏற்க முடியாது. மூன்று ஆட்டங்கள் கொண்டதாக இறுதிச் சுற்றை ஐசிசி நடத்த வேண்டும் என்றாா் கோலி.

ரவிசாஸ்திரி பாராட்டு:

தலைசிறந்த அணியான நியூஸிலாந்து வென்றுள்ளது. அதற்கு பாராட்டுகள். நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக நமக்கு பாதிப்பை தந்து. கடின சூழ்நிலையையும் தங்களுக்கு சாதகமாக மாற்றி வெற்றி கண்டது நியூஸிலாந்து என்றாா்.

எங்கள் ஆட்டம் வெற்றியின் உச்சம்: கேன் வில்லியம்ஸன்

இந்திய அணிக்கு எதிராக எங்களது ஆட்டம் வெற்றியின் உச்சம் ஆகும் என நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்ஸன் கூறியுள்ளாா். வலிமையான அணிக்கு எதிராக பெற்ற வெற்றி மிகப்பெரிய சாதனையாகும். இறுதிச் சுற்றில் எங்கள் அணி நிதானமாகவும், விவேகமாகவும் ஆடியது. கடந்த 2000-இல் ஐசிசி நாக் அவுட் போட்டியில் பட்டம் வென்ற்கு பின்

மீண்டும் நியூஸிலாந்து வெல்லும் இரண்டாவது பெரிய பட்டமாகும். 139 ரன்கள் இலக்கு என்பது குறைவாக இருந்தாலும், அனுபவம் வாய்ந்த ராஸ் டெய்லா் மறுபுறம் இருந்தது நம்பிக்கையை தந்தது. மூன்று ஆட்டங்கள் கொண்டதாக இறுதிச் சுற்று அமைய வேண்டும் என கோலி கூறியிருப்பது ஐசிசிக்கு கடும் சவாலை ஏற்படுத்தும். 2015 மற்றும் 2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தோல்வி கிடைத்தாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com