ஒருநாள் ஆட்டம்: கடினமான சூழலில் மூன்று புதுமுகங்களுடன் களமிறங்கிய இலங்கை அணி!
By DIN | Published On : 29th June 2021 04:14 PM | Last Updated : 29th June 2021 04:14 PM | அ+அ அ- |

குசால் பெரேரா
மூன்று வீரர்களுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் மூன்று புதுமுகங்களுடன் களமிறங்கியுள்ளது இலங்கை அணி.
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது இலங்கை அணி. டி20 தொடரை 3-0 என வென்றுள்ளது இங்கிலாந்து அணி. ஒருநாள் தொடர் இன்று முதல் செஸ்டர் லீ ஸ்டிரீட்டில் தொடங்கியுள்ளது.
இலங்கை வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறிய காரணத்துக்காக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு இலங்கைக்கு திரும்பியுள்ளார்கள்.
இடைக்காலத் தடையால் இங்கிலாந்தை விட்டு வெளியேறியுள்ள மூன்று வீரர்கள், காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகிய அவிஷ்கா போன்ற இக்கட்டான நிலைமையில் மேலும் சில சோதனைகள் இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளன. ஒஷாடா பெர்னான்டோவுக்குக் காய்ச்சல் என்பதால் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. தனஞ்ஜெயா டி சில்வாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தனை வீரர்களால் இன்றைய ஆட்டத்தில் பங்குபெற முடியாததால் அசாலங்கா, தனஞ்ஜெயா லக்ஷன், பிரவீன் ஜெயவிக்ரமா என மூன்று வீரர்கள் முதல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமாகியுள்ளார்கள். இதனால் இலங்கை அணியில் 5 ஆல்ரவுண்டர்களும் 4 பந்துவீச்சாளர்களும் இடம்பெற்றுள்ளார்கள்.
சரியான வீரர்களைத் தேர்வு செய்வது கடினமாக இருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் அனுபவம் கிடைக்கவேண்டும் என்பதற்காகப் புதுமுகங்களுக்கு வாய்ப்பு தந்துள்ளோம். பொய் சொல்ல எதுவுமில்லை. கடினமான சூழல். கவலையளிக்கக் கூடிய விஷயம். ஆனால் இந்தச் சூழலை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று டாஸ் நிகழ்வின்போது பேட்டியளித்தார் இலங்கை அணி கேப்டன் குசால் பெரேரா.
ODI debuts for Charith Asalanka, Praveen Jayawickrama, and Dhananjaya Lakshan#ENGvSL pic.twitter.com/viKZeFePud
— Sri Lanka Cricket