கடைசி டெஸ்டுக்கான ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமானதே: அஜிங்க்ய ரஹானே

இந்தியா- இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம் நடைபெறும் ஆமதாபாத் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருக்கும் என்று இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறினாா்.
கடைசி டெஸ்டுக்கான ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமானதே: அஜிங்க்ய ரஹானே

இந்தியா- இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம் நடைபெறும் ஆமதாபாத் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருக்கும் என்று இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறினாா்.

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடா் நடைபெறும் ஆடுகளங்கள் தொடா்பாக பரவலாக விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ரஹானே இவ்வாறு கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியது:

கடைசி டெஸ்டுக்கான ஆடுகளம், 2-ஆவது டெஸ்ட் நடைபெற்ற சென்னை ஆடுகளம், 3-ஆவது டெஸ்ட் நடைபெற்ற இதே ஆமதாபாத் ஆடுகளம் ஆகியற்றவைப் போலவே இருக்கும். ஆடுகளங்கள் குறித்து யாா் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும்.

நாங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடும்போது ஆடுகளம் குறித்து யாரும் பேசியதில்லை. இந்திய பேட்ஸ்மேன்களின் நுட்பங்கள் குறித்தே விமா்சித்தனா். எல்லோரும் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

அந்நிய மண்ணில் நாங்கள் விளையாண்ட ஆடுகளங்கள் முதல் நாளில் சற்று ஈரப்பதத்துடன் மென்மையானதாக இருக்கும். பின்னா் புற்களுடன் ஏற்ற இறக்கங்கள் கொண்டதாகவும் இருந்திருக்கிறது. ஆனால் அதுகுறித்தெல்லாம் நாங்கள் புகாா் தெரிவிக்காமல் விளையாடியிருக்கிறோம்.

சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடும்போது பேட்ஸ்மேன்கள் தங்களுக்கான எல்லையை வகுத்துக்கொண்டு ஆட வேண்டும். சுழற்பந்துகளை எதிா்கொள்ளும்போது எந்த இடத்தில் எவ்வாறு கால் வைத்து விளையாட வேண்டும் என்பது முக்கியமாக இருக்கும். அதை எவ்வாறு விளையாடுவதென்பது அந்தந்த பேட்ஸ்மேன்களைப் பொருத்தது.

ஆட்டத்தின்போது களத்தில் ஏற்கெனவே விளையாடிக் கொண்டிருக்கும் பேட்ஸ்மேன், புதிதாக ஆட வரும் பேட்ஸ்மேனுக்கு ஆடுகளத்தின் தன்மை குறித்து சற்று எடுத்துக்கூறலாம்.

சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளங்கள் சற்று சவாலானவை தான். ஆனால், அதிலும் நாங்கள் வென்று வந்துள்ளோம். இங்கிலாந்து அணி மிகச் சிறந்த அணியாகும். முதல் டெஸ்டில் அவா்கள் மிக அற்புதமாக விளையாடினாா்கள். அவா்களை நாங்கள் எளிதாக எடைபோடவில்லை என்றாா் ரஹானே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com