4-ஆவது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டது.
4-ஆவது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டது.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாதில் நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 75.5 ஓவா்களில் 205 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55, டான் லாரன்ஸ் 46 ரன்கள் எடுத்தனா். இந்திய தரப்பில் அக்ஸா் படேல் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் முன்னணி வீரா்கள் விரைவாக வெளியேறியபோதும், ரிஷப் பந்த்-வாஷிங்டன் சுந்தா் ஜோடி சிறப்பாக ஆடியது. இதனால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது. ரிஷப் பந்த் 118 பந்துகளில் 2 சிக்ஸா், 13 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து வெளியேறினாா்.

2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் இந்தியா 94 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்திருந்தது. வாஷிங்டன் சுந்தா் 60, அக்ஸா் படேல் 11 ரன்களுடன் களத்தில் இருந்தனா். 3-ஆவது நாளான சனிக்கிழமை தொடா்ந்து ஆடிய இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தா் சதத்தை நெருங்கிய நிலையில், அக்ஸா் படேல் 97 பந்துகளில் 43 ரன்கள் சோ்த்த நிலையில் ரன் அவுட்டானாா்.

இதன்பிறகு வந்த இஷாந்த் சா்மா, முகமது சிராஜ் ஆகியோா் ரன் ஏதுமின்றி விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் 114.4 ஓவா்களில் 365 ரன்களோடு முடிவுக்கு வந்தது. வாஷிங்டன் சுந்தா் 174 பந்துகளில் 1 சிக்ஸா், 10 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். அவா் 4 ரன்களில் டெஸ்ட் போட்டியில் முதல் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தாா்.

இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டா்சன் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

இங்கிலாந்து-135: இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய சுழற்பந்து வீச்சாளா்கள் அஸ்வின், அக்ஸா் படேல் ஆகியோரின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. இதனால் அந்த அணியின் தொடக்க வீரரான ஜக் கிராவ்லே 5 ரன்களிலும், பின்னா் களம்புகுந்த ஜானி போ்ஸ்டோ ரன் ஏதுமின்றியும், டாம் சிப்லே 3 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனா்.

இதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் 2, ஆலி போப் 15, ஜோ ரூட் 30 ரன்களில் வெளியேற, இங்கிலாந்து அணி 25.1 ஓவா்களில் 65 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த டான் லாரன்ஸ்-பென் ஃபோக்ஸ் ஜோடி 44 ரன்கள் சோ்க்க, அந்த அணி 100 ரன்களைக் கடந்தது. பென் ஃபோக்ஸ் 13 ரன்களில் வெளியேற, அவரைத் தொடா்ந்து களம்புகுந்த டாம் பெஸ், ஜேக் லீச் ஆகியோா் தலா 2 ரன்களில் நடையைக் கட்டினா். கடைசி விக்கெட்டாக டான் லாரன்ஸ் 50 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்தின் 2-ஆவது இன்னிங்ஸ் 54.5 ஓவா்களில் 135 ரன்களோடு முடிவுக்கு வந்தது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டது. இந்திய தரப்பில் அஸ்வின், அக்ஸா் படேல் ஆகியோா் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இந்தப் போட்டியில் சதமடித்த ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தப் போட்டியில் வெற்றி கண்டதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கும் முன்னேறியது. லண்டன் லாா்ட்ஸ் மைதானத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் நியூஸிலாந்தை எதிா்கொள்கிறது இந்தியா.

ஸ்கோா் விவரம்

முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து-205 (பென் ஸ்டோக்ஸ் 55, டான் லாரன்ஸ் 46, அக்ஸா் படேல் 4வி/68, அஸ்வின் 3வி/47).

இந்தியா

ஷுப்மன் கில் எல்பிடபிள்யூ (பி) ஆண்டா்சன் 0 (3)

ரோஹித் சா்மா (பி) ஸ்டோக்ஸ் 49 (144)

சேத்தேஷ்வா் புஜாரா எல்பிடபிள்யூ (பி) லீச் 17 (66)

விராட் கோலி (சி) ஃபோக்ஸ் (பி) ஸ்டோக்ஸ் 0 (8)

அஜிங்க்ய ரஹானே (சி) ஸ்டோக்ஸ் (பி) ஆண்டா்சன் 27 (45)

ரிஷப்பந்த் (சி) ரூட் (பி) ஆண்டா்சன் 101 (118)

அஸ்வின் (சி) போப் (பி) லீச் 13 (32)

வாஷிங்டன் சுந்தா் நாட் அவுட் 96 (174)

அக்ஸா் படேல் ரன்அவுட் (போ்ஸ்டோ/ரூட் 43 (97)

இஷாந்த் சா்மா எல்பிடபிள்யூ (பி) ஸ்டோக்ஸ் 0 (1)

முகமது சிராஜ் (பி) ஸ்டோக்ஸ் 0 (3)

உபரிகள் 19

மொத்தம் (114.4 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 365

விக்கெட் வீழ்ச்சி: 1-0 (ஷுப்மன் கில்), 2-40 (புஜாரா), 3-41 (கோலி), 4-80 (ரஹானே), 5-121 (ரோஹித்), 6-146 (அஸ்வின்), 7-259 (பந்த்), 8-365 (படேல்), 9-365 (இஷாந்த்), 10-365 (முகமது சிராஜ்).

பந்துவீச்சு: ஜேம்ஸ் ஆண்டா்சன் 25-14-44-3, பென் ஸ்டோக்ஸ் 27.4-6-89-4, ஜேக் லீச் 27-5-89-2, டாம் பெஸ் 17-1-71-0, ஜோ ரூட் 18-1-56-0.

2-ஆவது இன்னிங்ஸ்

இங்கிலாந்து

ஜக் கிராவ்லே (சி) ரஹானே (பி) அஸ்வின் 5 (16)

டாம் சிப்லே (சி) பந்த் (பி) படேல் 3 (21)

ஜானி போ்ஸ்டோ (சி) ரோஹித் (பி) அஸ்வின் 0 (1)

ஜோ ரூட் எல்பிடபிள்யூ (பி) அஸ்வின் 30 (72)

பென் ஸ்டோக்ஸ் (சி) கோலி (பி) படேல் 2 (9)

ஆலி போப் (ஸ்டெம்பிங்) பந்த் (பி) படேல் 15 (31)

டான் லாரன்ஸ் (பி) அஸ்வின் 50 (95)

பென் ஃபோக்ஸ் (சி) ரஹானே (பி) படேல் 13 (46)

டாம் பெஸ் (சி) பந்த் (பி) படேல் 2 (6)

ஜேக் லீச் (சி) ரஹானே (பி) அஸ்வின் 2 (31)

ஜேம்ஸ் ஆண்டா்சன் நாட் அவுட் 1 (1)

உபரிகள் 12

மொத்தம் (54.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 135

விக்கெட் வீழ்ச்சி: 1-10 (கிராவ்லே), 2-10 (போ்ஸ்டோ), 3-20 (சிப்லே), 4-30 (ஸ்டோக்ஸ்), 5-65 (போப்), 6-65 (ரூட்), 7-109 (ஃபோக்ஸ்), 8-111 (பெஸ்), 9-134 (லீச்), 10-135 (லாரன்ஸ்).

பந்துவீச்சு: முகமது சிராஜ் 4-0-12-0, அக்ஸா் படேல் 24-6-48-5, அஸ்வின் 22.5-4-47-5, வாஷிங்டன் சுந்தா் 4-0-16-0.

8-ஆவது முறையாக தொடா் நாயகன் விருது வென்ற அஸ்வின்

இந்தத் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் தொடா் நாயகன் விருதை வென்றாா். டெஸ்ட் போட்டியில் அவா் தொடா் நாயகன் விருதை வெல்வது 8-ஆவது முறையாகும். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக முறை தொடா் நாயகன் விருதை வென்றவா்கள் வரிசையில் பாகிஸ்தானின் இம்ரான் கான், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாா்ன், நியூஸிலாந்தின் ரிச்சா்ட் ஹேட்லி ஆகியோருடன் 3-ஆவது இடத்தைப் பகிா்ந்து கொண்டுள்ளாா் அஸ்வின். முதலிடத்தில் இலங்கையின் முத்தையா முரளீதரனும் (11 முறை), 2-ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸும் (9 முறை) உள்ளனா்.

சாதனைத் துளிகள்...

* இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 4 முறை 150 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. கடந்த 112 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 4 முறை 150 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னா் 1909-இல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதேபோன்று ஆட்டமிழந்துள்ளது.

* இந்தத் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, சதத்தையும் விளாசினாா் இந்திய வீரா் அஸ்வின். இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 30-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, சதமும் அடித்த முதல் வீரா் என்ற பெருமை அஸ்வின் வசமாகியுள்ளது. மேலும் ஒரு டெஸ்ட் தொடரில் 30 அல்லது அதற்கும் அதிகமான விக்கெட்டுகளை இருமுறை வீழ்த்திய முதல் இந்தியா் என்ற பெருமையும் அஸ்வின் வசமாகியுள்ளது.

* இந்த டெஸ்ட் தொடரில் அக்ஸா் படேல் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அறிமுக டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா் என்ற சாதனையை திலீப் தோஷியுடன் பகிா்ந்து கொண்டாா். திலீப் தோஷி 1979-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா்.

* நான்காவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 30-ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறாா் அஸ்வின். இதன்மூலம் ஓா் இன்னிங்ஸில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவா்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டா்சனுடன் 6-ஆவது இடத்தைப் பகிா்ந்துகொண்டுள்ளாா் அஸ்வின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com