பிராந்திய உணர்வால் யூடியூப் விடியோக்களைத் தமிழில் வெளியிடுகிறீர்களா?: ரசிகருக்கு அஸ்வின் பதில்!

அன்பான ரசிகரே, இதைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை...
பிராந்திய உணர்வால் யூடியூப் விடியோக்களைத் தமிழில் வெளியிடுகிறீர்களா?: ரசிகருக்கு அஸ்வின் பதில்!

பிராந்திய உணர்வால் யூடியூப் விடியோக்களைத்  தமிழில் வெளியிடுகிறீர்களா என்று கேள்வி எழுப்பிய ரசிகருக்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் பதில் அளித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின், தொடர் நாயகன் விருதை வென்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சமீபத்தில் சாதனை படைத்தார்.

தனக்கென சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை வைத்திருக்கிறார் அஸ்வின். அதில் பெரும்பாலும் அவர் தமிழில் தான் உரையாடுவார். எனினும் எல்லாக் காணொளிகளுக்கும் ஆங்கிலத்தில் சப்டைட்டில் வைத்துவிடுவார். தமிழில் காணொளிகள் இருந்தாலும் ஆங்கில சப்டைட்டில் இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்களிடம் அஸ்வினின் யூடியூப் சேனலுக்குப் பலத்த வரவேற்பு உண்டு. சமீபத்தில் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் குறித்து அஸ்வின் வெளியிட்ட காணொளிகளை பல லட்சம் பேர் பார்த்தார்கள். 

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் அஸ்வினிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அஸ்வின் எதற்காக காணொளிகளைத் தொடர்ந்து தமிழில் வெளியிடுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. ஆங்கிலத்தில் இருந்த சில காணொளிகளை நான் மிகவும் விரும்பியுள்ளேன். ஆங்கில சப்டைட்டில்களை வெளியிடுவதில் என்ன பிரச்னை? நிறைய ரசிகர்களிடம் அவருடைய காணொளிகள் சென்று சேர வேண்டாமா? தேசிய அணி கிரிக்கெட் வீரரிடம் ஏன் பிராந்தியவாதம் என்றார்.

அஸ்வினுக்கு எதிரான இந்த ட்வீட்டைக் கண்டித்துப் பல ரசிகர்களும் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். இதையடுத்து அந்த ரசிகருக்கு அஸ்வின் பதில் அளித்ததாவது:

அன்பான ரசிகரே, இதைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. எல்லோருக்கும் அவரவர் கருத்துகளைச் சொல்ல உரிமையுண்டு. இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். என்னுடைய விருந்தினருக்கு எது செளகரியமோ அல்லது என்னுடைய தேர்வினால் (தமிழில்) நிகழ்சியை நடத்துகிறேன். ஏராளமான ஆங்கில நிகழ்ச்சிகள் உள்ளன. என் தேர்வின்படி நிகழ்ச்சியை நடத்த அனுமதியுங்கள். எல்லாக் காணொளிகளுக்கும் சப்டைட்டில்கள் உள்ளன. நேரலை நிகழ்ச்சிகளுக்கு சப்டைட்டில் வழங்க சிறிது நேரமாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com