சிக்கலில் ஐசிசியின் தலைமைச் செயல் அதிகாரி!

நிர்வாகத் திறமை குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
மனு சாஹ்னி (கோப்புப் படம்)
மனு சாஹ்னி (கோப்புப் படம்)

ஐசிசியின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள மனு சாஹ்னி, கட்டாய விடுமுறையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைமை செயல் அதிகாரியாக சிங்கப்பூரின் மானு சாஹ்னி, 2019 ஜனவரியில் நியமிக்கப்பட்டார். ஈஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மேலாண் இயக்குநராகப் பணியாற்றிய மானு சாஹ்னியை புதிய தலைமை செயல் அலுவலராக நியமிக்கும் முடிவுக்கு அப்போதைய ஐசிசி தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையிலான நியமனக் குழு ஒப்புதல் அளித்தது. 2019 ஜனவரியில் ஐசிசியில் இணைந்த மனு சாஹ்னி, ஏப்ரலில் முழுமையாகப் பொறுப்பேற்றார். 

ஐசிசி அமைப்பின் நடவடிக்கைகள் குறித்த ஒரு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில்  தலைமை செயல் அதிகாரி மனு சாஹ்னி மீது பலரும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்தது. மனு சாஹ்னி எடுக்கும் சில முடிவுகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்புகள் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளன. முக்கியமாக, 2023-2031 வரை ஒவ்வொரு வருடமும் ஆடவர் & மகளிர் ஐசிசி போட்டிகள் நடைபெறவேண்டும் என்று துபையில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்தக் காலக்கட்டத்தில் இரு 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள், நான்கு டி20 உலகக் கோப்பைப் போட்டிகள், சாம்பியன்ஸ் கோப்பை போன்ற இரு 50 ஓவர் போட்டிகள் என புதிய ஆட்ட அட்டவணையை அறிமுகப்படுத்த இருந்தது ஐசிசி. 2015 முதல் 2023 வரையிலான காலக்கட்டங்களில் 2018, 2022 ஆகிய வருடங்களில் எந்தவொரு ஐசிசி போட்டியும் இல்லை என்பதால் அதில் மாற்றம் கொண்டுவர ஐசிசி முடிவெடுத்து இதுபோன்ற ஒவ்வொரு வருடமும் ஒரு ஐசிசி போட்டி நடக்கவேண்டும் என்று புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த எண்ணியது. இதை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளவில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்களுக்குத்தான் பிசிசிஐ முக்கியத்துவம் அளிக்கும். இதர நாடுகளிடம் ஏற்கெனவே அளித்த உத்தரவாதத்தைக் காப்பாற்ற பிசிசிஐ விரும்புகிறது என பிசிசிஐ தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. சாம்பியன்ஸ் கோப்பை போல நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கூடுதலான ஐசிசி போட்டி ஒன்று நடந்தால் அதன் மூலம் அனைத்து நாடுகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது ஐசிசியின் வாதமாக இருந்தது. பிசிசிஐ போல இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களும் ஐசிசியின் புதிய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரத்தினால் மானு சாஹ்னிக்கு எதிரான நிலைப்பாட்டை மூன்று நாடுகளும் எடுத்தன.

மேலும் ஐசிசி உறுப்பினர்களும் மனு சாஹ்னிக்கு எதிரான கருத்துகளைக் கூறியுள்ளார்கள். அவருடைய நிர்வாகத் திறமை குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதையடுத்து கட்டாய விடுமுறையில் செல்லும்படி மனு சாஹ்னிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது பதவியை மனு சாஹ்னி ராஜிநாமா செய்யாவிட்டால் அவரைப் பதவியிலிருந்து நீக்கவும் ஏற்பாடுகள் நடைபெறுவதாகத் தெரிகிறது. ஐசிசி அமைப்பில் அதற்கு வாக்கெடுப்பு நடத்தி 17 வாக்குகளில் 12 வாக்குகள் கிடைத்தால் மட்டுமே மனு சாஹ்னியைப் பதவியிலிருந்து நீக்க முடியும். எனினும் இந்த விவகாரம் குறித்து ஐசிசி, மனு சாஹ்னி என இரு தரப்பும் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com