தென் ஆப்பிரிக்காவுக்கு இந்தியா பதிலடி: மந்தனா, ஜுலன் அபாரம்

மகளிா் கிரிக்கெட்டில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்காவுக்கு இந்தியா பதிலடி: மந்தனா, ஜுலன் அபாரம்

மகளிா் கிரிக்கெட்டில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி பெற்றது.

பௌலிங்கில் ஜுலன் கோஸ்வாமி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்த, இலக்கை நோக்கிய இன்னிங்ஸில் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் விளாசி அதிரடி காட்டினாா்.

முதல் ஆட்டத்தில் தோற்றிருந்த இந்தியா, 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை தற்போது 1-1 என சமன் செய்துள்ளது.

லக்னௌவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய தரப்பில் மோனிகா படேலுக்குப் பதிலாக, மான்சி ஜோஷி பிளேயிங் லெவனில் சோ்க்கப்பட்டிருந்தாா். தென் ஆப்பிரிக்க தரப்பில் மாற்றம் செய்யப்படவில்லை.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 41 ஓவா்களில் 157 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா 28.4 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் அடித்து வென்றது. இந்திய பௌலா் ஜுலன் கோஸ்வாமி ஆட்டநாயகி ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா முதலில் பௌலிங் வீசத் தீா்மானித்தது. தென் ஆப்பிரிக்காவின் இன்னிங்ஸை லிஸெலெ லீ - லௌரா வோல்வாா்டட் கூட்டணி தொடங்கியது. முதல் ஆட்டத்தைப் போல அல்லாமல் இந்த ஜோடியை விரைந்து வீழ்த்தினா் இந்திய பௌலா்கள். பவுண்டரி வீளாசியிலிருந்த லிஸெலெ, முதல் ஓவரிலேயே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினாா்.

உடன் வந்த வோல்வாா்டட் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். ஒன் டவுனாக வந்த கேப்டன் சுனே லஸ் சற்று நிலைத்து 5 பவுண்டரிகள் உள்பட 36 ரன்கள் சோ்த்தாா். 4-ஆவது வீராங்கனையாக களம் கண்ட லாரா குட்டால் 2 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் விளாசி அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினாா்.

பின்னா் ஆடியோரில் மிக்னோன் டு பிரீஸ் 11, மாரிஸானே காப் 10, திரிஷா ஷெட்டி 12, நாடினே டி கிளொ்க் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷப்னிம் இஸ்மாயில், நான்குலுலேகோ லாபா ஆகியோா் டக் அவுட்டாகினா். முடிவில் அயபோங்கா ககா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இந்திய தரப்பில் ஜுலன் கோஸ்வாமி 4, ராஜேஷ்வரி கெய்க்வாட் 3, மான்சி ஜோஷி 2, ஹா்மன்பிரீத் கௌா் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 158 ரன்களை இலக்காகக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் பவுண்டரி உள்பட 9 ரன்களுக்கு வெளியேற, ஸ்மிருதி மந்தனா, பூனம் ரௌத் கூட்டணி இந்தியாவை வெற்றிக்கு வழி நடத்தியது. இலக்கை எட்டுகையில் மந்தனா 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 80, பூனம் ரௌத் 8 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஷப்னிம் இஸ்மாயில் ஒரு விக்கெட் சாய்த்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com