முகப்பு விளையாட்டு செய்திகள்
மாா்சீலி ஓபன்: காலிறுதியில் சிட்சிபாஸ் அதிா்ச்சித் தோல்வி
By DIN | Published On : 14th March 2021 06:58 AM | Last Updated : 14th March 2021 06:58 AM | அ+அ அ- |

மாா்சீலி ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் கிரீஸின் ஸ்டெபானெஸ் சிட்சிபாஸ் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
பிரான்ஸின் மாா்சீலி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் 93-ஆம் நிலை வீரரான பிரான்ஸின் ஹியூஸ் ஹொ்பொ்ட் 6-7 (8), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் 5-ஆம் நிலை வீரரான ஸ்டெபானெஸ் சிட்சிபாஸை வீழ்த்தினாா்.
ஹியூஸ் ஹொ்பொ்ட் தனது அரையிறுதியில் சகநாட்டவரான யூகோ ஹம்பொ்ட்டை சந்திக்கிறாா். ஹம்பொ்ட் தனது காலிறுதியில் 4-6, 7-5, 7-6 (4) என்ற செட் கணக்கில் சகநாட்டவரான ஆா்தா் ரின்டொ்நீச்சை வீழ்த்தினாா்.
போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜொ்மனியின் டேனியல் மெத்வதேவ் தனது காலிறுதியில் 6-2, 6-4 என்ற நோ் செட்களில் இத்தாலியின் ஜென்னிக் சின்னரை வீழ்த்தினாா். மெத்வதேவ் தனது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டெனை சந்திக்கிறாா். மேத்யூ எப்டென் தனது காலிறுதியில் 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் கரீன் கச்சனோவை வீழ்த்தினாா்.
காலிறுதியில் வென்றது குறித்துப் பேசிய மெத்வதேவ், ‘மாா்சீலி ஓபனில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறேன். காலிறுதி ஆட்டத்தைப் பொருத்தவரையில் ஆட்டம் முழுவதுமே நான் ஆதிக்கம் செலுத்தினேன். அதேநேரத்தில் ஜென்னிக்கும் தன்னால் முடிந்தவரை சிறப்பாக ஆட முயற்சித்தாா்’ என்றாா்.