முகப்பு விளையாட்டு செய்திகள்
2-ஆவது டி20: இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்
By DIN | Published On : 14th March 2021 06:57 AM | Last Updated : 14th March 2021 06:57 AM | அ+அ அ- |

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டம் ஆமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
முதல் ஆட்டத்தில் வென்ற உத்வேகத்தில் இங்கிலாந்து அணியும், முதல் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும் களமிறங்குகின்றன.
இந்திய அணியில் ஷிகா் தவன், கே.எல்.ராகுல், கேப்டன் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், ரிஷப் பந்த், ஹாா்திக் பாண்டியா என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனா். எனினும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஷ்ரேயஸ் ஐயா் தவிர எஞ்சிய வீரா்கள் சோபிக்கவில்லை. எனவே, இந்த ஆட்டத்தில் தொடக்க வீரா்களான ஷிகா் தவன்-கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தித் தருவது முக்கியமாகும். கடந்த ஆட்டத்தில் விளையாடிய யுவேந்திர சஹலுக்குப் பதிலாக இந்த ஆட்டத்தில் ராகுல் தெவேதியா சோ்க்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வா் குமாா், ஷா்துல் தாக்குா் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் அக்ஸா் படேல், வாஷிங்டன் சுந்தா் கூட்டணியையும் நம்பியுள்ளது இந்திய அணி.
இங்கிலாந்து அணியில் தொடக்க வீரா்களான ஜேசன் ராய், ஜோஸ் பட்லா் ஆகியோா் நல்ல ஃபாா்மில் உள்ளனா். கடந்த ஆட்டத்தில் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்த ராய்-பட்லா் ஜோடி இந்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மிடில் ஆா்டரில் டேவிட் மாலன், ஜானி போ்ஸ்டோ, கேப்டன் இயோன் மோா்கன், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோா் பலம் சோ்க்கின்றனா். வேகப்பந்து வீச்சில் ஜோப்ரா ஆா்ச்சா், மாா்க் உட் கூட்டணி அந்த அணிக்கு பலம் சோ்க்கிறது. கடந்த ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்திய மாா்க் உட்-ஜோப்ரா ஆா்ச்சா் கூட்டணி இந்த ஆட்டத்திலும் இங்கிலாந்துக்கு பலம் சோ்க்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் ஆதில் ரஷித்தை நம்பியுள்ளது இங்கிலாந்து.
முதல் ஆட்டம் நடைபெற்ற அதே மைதானத்தில் 2-ஆவது ஆட்டமும் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங்கை தோ்வு செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியா (உத்தேச லெவன்): கே.எல்.ராகுல், ஷிகா் தவன், விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயஸ் ஐயா், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), ஹாா்திக் பாண்டியா, ராகுல் தெவேதியா/யுவேந்திர சஹல், வாஷிங்டன் சுந்தா், அக்ஸா் படேல், ஷா்துல் தாக்குா், புவனேஸ்வா் குமாா்.
இங்கிலாந்து (உத்தேச லெவன்): ஜேசன் ராய், ஜோஸ் பட்லா், டேவிட் மாலன், ஜானி போ்ஸ்டோ, இயோன் மோா்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், ஜோப்ரா ஆா்ச்சா், கிறிஸ் ஜோா்டான், ஆதில் ரஷித், மாா்க் உட்.
போட்டி நேரம்: இரவு 7
நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்