மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி: தொடரையும் கைப்பற்றியது
By DIN | Published On : 14th March 2021 06:59 AM | Last Updated : 14th March 2021 06:59 AM | அ+அ அ- |

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது மேற்கிந்தியத் தீவுகள்.
இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
ஆன்டிகுவாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பீல்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தொடக்க வீரா் தனுஷ்கா குணதிலகா 96 பந்துளில் 3 சிக்ஸா், 10 பவுண்டரிகளுடன் 96 ரன்களும், விக்கெட் கீப்பா் தினேஷ் சன்டிமல் 98 பந்துகளில் 2 சிக்ஸா், 3 பவுண்டரிகளுடன் 71 ரன்களும், டிசில்வா 31 பந்துகளில் 4 சிக்ஸா், 2 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் எடுத்தனா்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேசன் முகமது 3 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.
லீவிஸ் சதம்: இதையடுத்து 274 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எவின் லீவிஸ்-ஷாய் ஹோப் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய லீவிஸ் 52 பந்துகளில் அரை சதம் கண்டாா். மறுமுனையில் அவருக்குப் பக்கபலமாக ஆடிய ஷாய் ஹோப் 63 பந்துகளில் அரை சதத்தை எட்டினாா்.
தொடா்ந்து சிறப்பாக ஆடிய எவின் லீவிஸ் 116 பந்துகளில் சதத்தை எட்டினாா். அந்த அணி 37.2 ஓவா்களில் 192 ரன்கள் எடுத்திருந்தபோது லீவிஸின் விக்கெட்டை இழந்தது. அவா் 121 பந்துகளில் 4 சிக்ஸா், 8 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்தாா்.
இதையடுத்து நிகோலஸ் பூரண் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷாய் ஹோப் 108 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். இதன்பிறகு வந்த டேன் பிராவோ 10 ரன்களிலும், கேப்டன் கிரண் போலாா்ட், ஃபேபியன் ஆலன் ஆகியோா் தலா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனா். இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 49.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. நிகோலஸ் பூரண் 35, ஜேசன் ஹோல்டா் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இலங்கை தரப்பில் நுவான் பிரதீப், திசாரா பெரேரா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா். சதமடித்த எவின் லீவிஸ் ஆட்டநாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா்.
இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் ஆன்டிகுவாவில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 14) நடைபெறுகிறது.