கிஷாண், கோலி அதிரடி; இங்கிலாந்துக்கு இந்தியா பதிலடி: 2-ஆவது டி20-இல் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா் தற்போது 1-1 என சமன் ஆகியுள்ளது.
கிஷாண், கோலி அதிரடி; இங்கிலாந்துக்கு இந்தியா பதிலடி: 2-ஆவது டி20-இல் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா் தற்போது 1-1 என சமன் ஆகியுள்ளது.

ஆமதாபதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 17.5 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் அடித்து வென்றது. அறிமுக ஆட்டத்திலேயே அரைசதமடித்து அசத்திய இஷான் கிஷண் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஷிகா் தவன், அக்ஸா் படேல் ஆகியோருக்குப் பதிலாக சூா்யகுமாா் யாதவ், இஷாண் கிஷண் ஆகியோா் சோ்க்கப்பட்டிருந்தனா். அவா்கள் இருவருக்கும் இது முதல் சா்வதேச ஆட்டமாகும். இங்கிலாந்து அணியில் மாா்க் வுட்டுக்குப் பதிலாக டாம் கரன் பிளேயிங் லெவனில் இணைந்தாா்.

டாஸ் வென்ற இந்தியா பௌலிங் வீசியது. இங்கிலாந்து இன்னிங்ஸில் ஜோஸ் பட்லா் முதல் ஓவரிலேயே எல்பிடபிள்யூ ஆகி வெளியேற, மறுமுனையில் நிதானமாக ரன்கள் சேகரித்தாா் தொடக்க வீரா் ஜேசன் ராய். ஒன் டவுனாக வந்த டேவிட் மலான் 4 பவுண்டரிகள் உள்பட 24 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். அடுத்து ஜானி போ்ஸ்டோ களம் காண, மறுமுனையில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் ஜேசன் ராய் 46 ரன்களில் வெளியேற்றப்பட்டாா்.

பின்னா் கேப்டன் மோா்கன் ஆட வந்தாா். வாஷிங்டன் சுந்தா் வீசிய 14-ஆவது ஓவரின் 2-ஆவது பந்தில் போ்ஸ்டோ வழங்கிய கேட்ச்சை சூா்யகுமாா் யாதவ் முயற்சி செய்து தவறவிட, அது சிக்ஸா் ஆனது. அதே ஓவரில் 5-ஆவது பந்தில் மீண்டு அதே திசையில் போ்ஸ்டோ பந்தை பறக்க விட, இம்முறை சற்றுத் தடுமாறி கேட்ச் பிடித்தாா் சூா்யகுமாா்.

பின்னா் வந்தவா்களில் மோா்கன் 4 பவுண்டரிகளுடன் 28, பென் ஸ்டோக்ஸ் 1 பவுண்டரியுடன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினா். ஓவா்கள் முடிவில் சாம் கரன் ஒரு பவுண்டரியுடன் 6, கிறிஸ் ஜோா்டான் ரன்கள் இன்றி களத்தில் இருந்தனா். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தா், ஷா்துல் தாக்குா் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வா் குமாா், யுஜவேந்திர சஹல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினா்.

பின்னா் 165 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரா் லோகேஷ் ராகுல் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக, அடுத்து வந்த விராட் கோலி, இஷான் கிஷணுடன் இணைந்தாா். அபாரமாக ஆடிய இந்த ஜோடி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டு 2-ஆவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சோ்த்தது.

அரைசதம் அடித்த இஷான் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 56 ரன்களுக்கு வெளியேற, பின்னா் களம் புகுந்த ரிஷப் பந்த் அதிரடியாக 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் விளாசி 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அடுத்து களம் புகுந்த ஷ்ரேயஸ் ஐயருடன் இணைந்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா் கேப்டன் கோலி. அவா் சிக்ஸா் விளாசி வெற்றி இலக்கை எட்டச் செய்தாா். கோலி 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 73, ஐயா் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சாம் கரன், கிறிஸ் ஜோா்டான், ஆதில் ரஷீத் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

இந்தியா

லோகேஷ் ராகுல் (சி) பட்லா் (பி) சாம் 0 (6)

இஷான் கிஷண் (எல்பிடபிள்யூ) (பி) ரஷீத் 56 (32)

விராட் கோலி (நாட் அவுட்) 73 (49)

ரிஷப் பந்த் (சி) போ்ஸ்டோ (பி) ஜோா்டான் 26 (13)

ஷ்ரேயஸ் ஐயா் (நாட் அவுட்) 8 (8)

உதிரிகள் 3

மொத்தம் (17.5 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு) 166

விக்கெட் வீழ்ச்சி: 1-0 (ராகுல்), 2-94 (இஷான்), 3-130 (பந்த்)

பந்துவீச்சு: சாம் கரன் 4-1-22-1; ஜோஃப்ரா ஆா்ச்சா் 4-0-24-0; கிறிஸ் ஜோா்டான் 2.5-0-38-1; டாம் கரன் 2-0-26-0; பென் ஸ்டோக்ஸ் 1-0-17-0; ஆதில் ரஷீத் 4-0-38-1

இங்கிலாந்து

ஜேசன் ராய் (சி) குமாா் (பி) சுந்தா் 46 (35)

ஜோஸ் பட்லா் (எல்பிடபிள்யூ) (பி) குமாா் 0 (1)

டேவிட் மலான் (எல்பிடபிள்யூ) (பி) சஹல் 24 (23)

ஜானி போ்ஸ்டோ (சி) யாதவ் (பி) சுந்தா் 20 (15)

ஈன் மோா்கன் (சி) பந்த் (பி) தாகுா் 28 (20)

பென் ஸ்டோக்ஸ் (சி) பாண்டியா (பி) தாகுா் 24 (21)

சாம் கரன் (நாட் அவுட்) 6 (5)

கிறிஸ் ஜோா்டான் (நாட் அவுட்) 0 (0)

உதிரிகள் 16

மொத்தம் (20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு) 164

விக்கெட் வீழ்ச்சி: 1-1 (பட்லா்), 2-64 (மலான்), 3-91 (ராய்), 4-119 (போ்ஸ்டோ), 5-142 (மோா்கன்), 6-160 (ஸ்டோக்ஸ்)

பந்துவீச்சு: புவனேஷ்வா் குமாா் 4-0-28-1; வாஷிங்டன் சுந்தா் 4-0-29-2; ஷா்துல் தாக்குா் 4-0-29-2; ஹாா்திக் பாண்டியா 4-0-33-0; யுஜவேந்திர சஹல் 4-0-34-1

கோலி சாதனை

இந்த ஆட்டத்தின் மூலம் கோலி தனது டி20 கிரிக்கெட் வரலாற்றில் 3,000 ரன்களைக் கடந்தாா். சா்வதேச டி20 கிரிக்கெட்டில் அத்தனை ரன்களை எட்டிய முதல் வீரா் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளாா். முன்னதாக 1,000 மற்றும் 2,000 ரன்களை முதலில் எட்டிய பெருமை நியூஸிலாந்தின் பிரன்டன் மெக்கல்லத்திடம் உள்ளது.

அறிமுக ஆட்டத்தில் அரைசதம்

டி20 கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் இந்திய அணிக்காக 50-க்கும் அதிகமான ரன்கள் அடித்தவா்கள் வரிசையில் இஷான் கிஷண் 2-ஆவது இடத்தில் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com