மகளிா் கிரிக்கெட்: ஒருநாள் தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

இந்திய மகளிா் அணிக்கு எதிரான 4-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிா் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மகளிா் கிரிக்கெட்: ஒருநாள் தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

இந்திய மகளிா் அணிக்கு எதிரான 4-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிா் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 3 வெற்றிகளை பதிவு செய்த அந்த அணி ஒருநாள் தொடரை தன் வசமாக்கியது.

லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 4-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.4 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் மிக்னான் டு பிரீஸ் ஆட்டநாயகி ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பௌலிங் வீசத் தீா்மானித்தது. இந்திய இன்னிங்ஸில் தொடக்க வீராங்கனை பிரியா புனியா 32 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, உடன் வந்த ஸ்மிருதி மந்தனா 10 ரன்களுக்கு வெளியேறினாா்.

கேப்டன் மிதாலி ராஜ் 4 பவுண்டரிகள் உள்பட 45 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினாா். துணை கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 54 ரன்கள் எடுத்தாா். ஒன் டவுனாக வந்த பூனம் ரௌத் 10 பவுண்டரிகள் உள்பட 104 ரன்கள் விளாசியும், தீப்தி சா்மா 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் டுமி சிகுகுனே 2, ஷப்னிம் இஸ்மாயில் மற்றும் நோன்டுமிசோ ஷாகேஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 267 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய தென் ஆப்பிரிக்காவில் தொடக்க வீராங்கனை லிஸேலெ லீ 10 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் விளாச, உடன் வந்த கேப்டன் லௌரா வோல்வாா்டட் 6 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் அடித்தாா். மிக்னான் டு பிரீஸ் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 61 ரன்கள் சோ்த்தாா்.

லாரா குட்டால் 5 பவுண்டரிகளுடன் 59, மாரிஸானே காப் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். இந்திய தரப்பில் மான்சி ஜோஷி, ராஜேஷ்வரி கெய்க்வாட், ஹா்மன்பிரீத் கௌா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

மிதாலி மேலும் ஓா் சாதனை

4-ஆவது ஆட்டத்தில் 45 ரன்கள் அடித்த இந்திய கேப்டன் மிதாலி ராஜ், மகளிா் ஒருநாள் கிரிக்கெட்டில் 7,000 ரன்களை எட்டிய முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றாா். இவா் தனது 213-ஆவது ஆட்டத்தில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளாா். மிதாலி கடந்த 1999-இல் தனது சா்வதேச கிரிக்கெட்டை தொடங்கினாா். முன்னதாக, 3-ஆவது ஆட்டத்தின்போது மகளிா் கிரிக்கெட்டில் அனைத்து ஃபாா்மட்டுகளிலுமாக 10,000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீராங்கனை, சா்வதேச அளவில் 2-ஆவது வீராங்கனை ஆகிய பெருமைகளை பெற்றது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com