வேகத்தில் மிரட்டிய மார்க் வுட்: கோலி விளாசலில் 156 எடுத்தது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.
வேகத்தில் மிரட்டிய மார்க் வுட்: கோலி விளாசலில் 156 எடுத்தது இந்தியா


இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டி20 ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் எதிர்பார்த்தபடி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இங்கிலாந்தில் டாம் கரனுக்குப் பதில் மார்க் வுட் மீண்டும் அணிக்குத் திரும்பினார்.

இந்திய அணியில் ரோஹித் சர்மா அணிக்குத் திரும்பியதால் சூர்யகுமார் யாதவுக்கு இடமில்லை.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். முதலிரண்டு ஆட்டங்களில் சொதப்பிய ராகுல் இந்த முறையும் ரன் ஏதும் எடுக்காமல் வுட் பந்தில் போல்டானார்.

சிறிது நேரம் தாக்குப்பிடித்து 15 ரன்கள் சேர்த்த ரோஹித்தும் வுட் வேகத்தில் வீழ்ந்தார்.

இந்த ஆட்டத்தில் 3-வது வீரராகக் களமிறக்கப்பட்ட இஷான் கிஷன் 4 ரன்களுக்கு ஜோர்டன் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து, கேப்டன் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பாட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய பாட்னர்ஷிப்பாக மாற்ற வேண்டிய கட்டத்தை எட்டியது.

அப்போது அவசியமில்லாத 3-வது ரன்னை எடுக்க முயன்று பந்த் ரன் அவுட் ஆனார். அவர் 20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் 9 ரன்கள் எடுத்து வுட் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, ரன் குவிக்கும் பொறுப்பை கோலி எடுத்துக்கொண்டார். ஆர்ச்சர் மற்றும் ஜோர்டனின் அடுத்தடுத்து ஓவரில் தலா 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடித்து ரன் ரேட்டை உயர்த்தினார். இதன்மூலம், 37-வது பந்தில் அரைசதத்தையும் எட்டினார்.

மறுமுனையில் ஹார்திக் பாண்டியா சரியான டைமிங் கிடைக்காமல் திணறியதால் கோலியே அதிரடியைக் கையில் எடுத்தார். முதல் 3 ஓவர்களில் மிரட்டி வந்த மார்க் வுட்டை, அவரது கடைசி ஓவரில் 2 அழகான ஷாட் மூலம் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரி அடித்து 17 ரன்களை விளாசினார்.

ஆர்ச்சர் வீசிய 19-வது ஓவரில் பாண்டியா 1 சிக்ஸர் அடித்தாலும், அவருக்கு டைமிங் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஸ்டிரைக்குக்கு வந்த கோலி கடைசி பந்தில் 1 பவுண்டரி அடித்தார். இதன்மூலம், அந்த ஓவரில் 11 ரன்கள் கிடைத்தன.

ஜோர்டன் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் பாண்டியா டைமிங் கிடைத்து சிக்ஸர் அடித்தார். 3-வது பந்துக்கு ஸ்டிரைக் வந்த கோலி மீண்டும் ஒரு அற்புதமான டைமிங் ஷாட் மூலம் பவுண்டரி அடிக்க இந்திய அணி 150 ரன்களைக் கடந்தது. அதன்பிறகு, பவுண்டரிகள் கிடைக்கவில்லை.

கடைசி பந்தில் பாண்டியா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி 46 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார்.

இங்கிலாந்து தரப்பில் வுட் 3 விக்கெட்டுகளையும், ஜோர்டன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com