இன்று கே.எல். ராகுல், நாளை இஷான் கிஷன், ரிஷப் பந்தா?: ஆகாஷ் சோப்ரா கேள்வி!

ஒரு வெற்றிகரமான பேட்ஸ்மேனை இரு குறைவான ஸ்கோர்களைக் கொண்டு நாம் கேள்வி கேட்கத் தொடங்கினால்...
இன்று கே.எல். ராகுல், நாளை இஷான் கிஷன், ரிஷப் பந்தா?: ஆகாஷ் சோப்ரா கேள்வி!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் கே.எல். ராகுலை வெளியேற்றி ரோஹித் சர்மாவைச் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவிலும் நடைபெறுகின்றன. 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது டி20 ஆட்டம் ஆமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. முந்தைய இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 1 வெற்றியை பதிவு செய்துள்ளதால், மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடா் தற்போது சமநிலையில் உள்ளது. எனவே தொடரில் முன்னிலை பெறுவதற்காக இந்தியா, இங்கிலாந்து அணிகள் தீவிரமாக முயற்சி செய்யும். இந்திய அணியைப் பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் தோற்றாலும், 2-வது ஆட்டத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டது. அந்த உத்வேகத்திலேயே 3-வது ஆட்டத்திலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்தத் தொடரில் இரு ஆட்டங்களில் விளையாடியுள்ள கே.எல். ராகுல் ஒரு ரன் மட்டுமே எடுத்துள்ளார். முதல் டி20யில் நான்கு பந்துகளில் 1 ரன்னும் 2-வது டி20யில் ஆறு பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்துள்ளார்.

இதனால் 3-வது டி20 ஆட்டத்தில் ராகுலுக்குப் பதிலாக ரோஹித் சர்மா களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

ஒரு வெற்றிகரமான பேட்ஸ்மேனை இரு குறைவான ஸ்கோர்களைக் கொண்டு நாம் கேள்வி கேட்கத் தொடங்கினால் உலகக் கோப்பையை வெல்லும் அணியை நம்மால் உருவாக்க முடியாது. இன்று கே.எல் ராகுல் என்றால் நாளை இஷான் கிஷன், அதற்குப் பிறகு ரிஷப் பந்த் என மாறும். பிறகு பாதுகாப்பற்ற வீரர்களைக் கொண்ட அணி தான் நம்மிடம் இருக்கும் என்றார். 

ஆமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 தொடருக்கு 50% ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக குஜராத் கிரிக்கெட் சங்கம் முன்பு அறிவித்தது. எனினும் மீதமுள்ள 3 டி20 ஆட்டங்களிலும் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆமதாபாத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் டி20 ஆட்டத்துக்கு 67,200 பேரும் 2-வது டி20 ஆட்டத்துக்கு 66,352 பேரும் வருகை தந்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com