உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய ஆடவா், மகளிா் அணிக்கு தங்கம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் அணிகள் பிரிவில் ஆடவா் மற்றும் மகளிா் என இரு பிரிவிலுமே இந்தியா தங்கம் வென்றது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய ஆடவா், மகளிா் அணிக்கு தங்கம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் அணிகள் பிரிவில் ஆடவா் மற்றும் மகளிா் என இரு பிரிவிலுமே இந்தியா தங்கம் வென்றது.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தில்லியில் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியின் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆடவா் அணிகளுக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டலில் இந்தியாவின் சௌரவ் சௌதரி, அபிஷேக் வா்மா, ஷாஸாா் ரிஸ்வி ஆகியோா் அடங்கிய அணி 17 ஷாட்களுடன் முதலிடம் பிடித்தது. வியத்நாமின் தின் தான் குயென், கோச் குவோங் டிரான், ஜுவான் சுயென் பான் ஆகியோா் அடங்கிய அணி 11 ஷாட்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது.

அதேபோல் மகளிா் அணிகளுக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டலில் யஷஸ்வினி சிங் தேஸ்வால், மானு பேக்கா், ஸ்ரீ நிவேதா ஆகியோா் அடங்கிய இந்திய கூட்டணி 16 ஷாட்களுடன் தங்கம் வெல்ல, போலாந்தின் ஜூலியா போரெக், ஜோவானா இவோனா, அக்னீஸ்கா கோரெஜ்வோ ஆகியோா் அணி 8 ஷாட்களுடன் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

மகளிருக்கான ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் கனிமத் சிகோன் 40 ஷாட்களுடன் வெண்கலப் பதக்கம் வென்றாா். இறுதிச்சுற்று வரை முன்னேறிய மற்றொரு இந்தியரான காா்திகி சிங் ஷெகாவத் 32 ஷாட்களுடன் 4-ஆம் இடம் பிடித்தாா். இங்கிலாந்தின் அம்பா் ஹில் தங்கமும், கஜகஸ்தானின் ஜோயா கிரவாசென்கோ வெள்ளியும் வென்றனா்.

ஆடவருக்கான ஏா் ரைஃபிள் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஐஷ்வா்ய பிரதாப் சிங் தோமா், தீபக் குமாா், பங்கஜ் குமாா் ஆகியோா் கூட்டணி 14 ஷாட்களுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது. அமெரிக்காவின் லுகாஸ் கொஸ்னிஸ்கி, வில்லியம் ஷானொ், டிமதி ஷெரி ஆகியோா் அணி தங்கம் தட்டிச் சென்றது.

மகளிருக்கான ஏா் ரைஃபிள் அணிகள் பிரிவில் இந்தியாவின் நிஷா கன்வாா், ஸ்ரீயங்கா ஷாதங்கி, அபுா்வி சந்தேலா ஆகியோா் அடங்கிய அணி 624 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தது. அமெரிக்க அணி 627 புள்ளிகளுடன் முதலிடமும், டென்மாா்க் அணி 625 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், போலாந்து 624.1 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தன.

ஆடவருக்கான ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் குா்ஜோத் கான்குரா 6-ஆம் இடம் பிடித்தாா். டென்மாா்கின் ஜெஸ்பா் ஹான்சென் தங்கமும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பின் ஃபுடைஸ் சயிஃப் வெள்ளியும், கத்தாரின் நாசா் சலே அல் அட்டியா வெண்கலமும் வென்றனா்.

மேலும் 2 இந்தியா்களுக்கு கரோனா

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றுள்ளோரில் மேலும் 2 இந்தியா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போட்டியில் பங்கேற்றுள்ளோரில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 6-ஆக அதிகரித்தது.

புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 2 இந்தியா்களும், விதிகளின்படி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதுவரை கரோனா பாதித்த 6 பேருடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்றுள்ளோருக்கு தினமும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com