முதல் ஒருநாள்: அரை சதமெடுத்த நான்கு பேட்ஸ்மேன்கள், இந்தியா 317/5

இருவருடைய கூட்டணியால் இந்திய அணியின் ஸ்கோர் 300 ரன்களைக் கடந்தது.
முதல் ஒருநாள்: அரை சதமெடுத்த நான்கு பேட்ஸ்மேன்கள், இந்தியா 317/5

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெறுகிறது. 

முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ஒருநாள் அணியில் கிருனாள் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரும் அறிமுகம் ஆகியுள்ளார்கள். கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராகவும் 5-ம் நிலை பேட்ஸ்மேனாகவும் விளையாடுவார் என கோலி அறிவித்துள்ளார். மேலும் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் களமிறங்குவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இடம்பிடித்துள்ளார். தமிழக வீரர் நடராஜன் அணியில் இடம்பெறவில்லை.

15 ஓவர்கள் வரை ரோஹித் - தவன் ஜோடியைப் பிரிக்க முடியாமல் தடுமாறியது இங்கிலாந்து அணி. அதன்பிறகு 28 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு தவன் - கோலி ஜோடியும் தொடர்ந்து ரன்களைச் சேர்த்தது. 68 பந்துகளில் அரை சதமெடுத்தார் ஷிகர் தவன். 50 பந்துகளில் அரை சதமெடுத்த விராட் கோலி, 56 ரன்களில் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயஸ் ஐயர் 6 ரன்களில் வுட் பந்துவீச்சில் வீழ்ந்தார். 

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவன், 98 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. 41-வது ஓவரில் ஹார்திக் பாண்டியா 1 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதற்குப் பிறகு எதிர்பாராத விதத்தில் இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வந்தவுடன் சாம் கரண் ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்தார் கிருனாள் பாண்டியா. வுட் வீசிய 48-வது ஓவரில் ராகுலும் கிருனாள் பாண்டியாவும் 21 ரன்கள் எடுத்தார்கள். தனது முதல் ஒருநாள் ஆட்டத்தில் 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்து அசத்தினார் கிருனாள் பாண்டியா. ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரரின் அதிவேக அரை சதமாகும் இது. இதன்பிறகு 39 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் ராகுலும் தனது அரை சதத்தை எட்டினார். இருவருடைய கூட்டணியால் இந்திய அணியின் ஸ்கோர் 300 ரன்களைக் கடந்தது.

இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 62, கிருனாள் 58 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com