பின்பற்றப்படாத லோதா பரிந்துரை: ஓய்வில்லாமல் உழைத்து வரும் இந்திய அணி!

இங்கிலாந்து தொடருக்குப் பிறகு இந்திய வீரர்கள் ஓய்வு எதுவும் இல்லாமல் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
பின்பற்றப்படாத லோதா பரிந்துரை: ஓய்வில்லாமல் உழைத்து வரும் இந்திய அணி!

இங்கிலாந்து தொடருக்குப் பிறகு இந்திய வீரர்கள் ஓய்வு எதுவும் இல்லாமல் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

லோதா பரிந்துரையின்படி ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய வீரர்கள் 15 நாள்கள் ஓய்வு எடுக்கவேண்டும். ஆனால் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடர், மார்ச் 28 அன்று முடிவடைகிறது. கடந்த நான்கு மாதங்களாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய பெரிய அணிகளுக்கு எதிராக முழு தொடர்களை விளையாடியுள்ளது. இதனால் பல வீரர்கள் சோர்வாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்துக்குப் பிறகு உடனடியாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கியதால் தான் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்ததாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார்.

இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்குப் பிறகு இந்திய வீரர்கள் உடனடியாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்கிறார்கள். 

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியின் 14-வது பருவம் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி நிறைவடைகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. எனினும் கரோனா தொற்று அச்சம் காரணமாக, முன்னெச்சரிக்கையாக தொடக்க ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. 

ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9 அன்று தொடங்குவதால் இங்கிலாந்து தொடரை முடித்தவுடன் சில நாள்கள் ஓய்வு எடுத்துவிட்டு நேரடியாக தங்களுடைய ஐபிஎல் அணியினருடன் இணைகிறார்கள் இந்திய வீரர்கள். இதனால் லோதா பரிந்துரைத்த 15 நாள்கள் ஓய்வு இந்த முறையும் இந்திய வீரர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. எனினும் ஐபிஎல் போட்டி முடிவடைந்த பிறகு இந்திய வீரர்களுக்கு இரு வாரங்கள் ஓய்வளிக்கப்பட வேண்டும் என கோலி கூறினார். அதற்கும் சாத்தியமில்லாமல் போய்விட்டது. 

ஐபிஎல் போட்டி மே 30 அன்று நிறைவுபெறுகிறது. அதற்குப் பிறகு ஜுன் 18 அன்று செளதாம்ப்டனில் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா பங்கேற்கிறது. இதனால் ஐபிஎல் போட்டி முடிவடைந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்கிறது. இதன்பிறகு இலங்கை, ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்து வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடும் இந்திய அணி பிறகு இங்கிலாந்தில் 5 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. 

இதனால் லோதா பரிந்துரையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் தொடர்ந்து உழைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் இந்திய வீரர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com