கடைசி ஓவரில் காப்பாற்றிய நடராஜன்; கரன் அதிரடி வீண்: தொடரை வென்றது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
கடைசி ஓவரில் காப்பாற்றிய நடராஜன்; கரன் அதிரடி வீண்: தொடரை வென்றது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் புணேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி, முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

330 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் 5 பந்துகளில் 3 பவுண்டரிகள் விளாசி அதிரடி தொடக்கத்தை அளித்தார் ராய். ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தில் ராயை போல்டாக்கி அசத்தினார் புவனேஷ்வர்.

தொடர்ந்து தனது அடுத்த ஓவரின் கடைசி பந்தில் பேர்ஸ்டோவ் (1) விக்கெட்டையும் வீழ்த்தி புவனேஷ்வர் மிரட்டலை வெளிப்படுத்தினார்.

கடந்த 2 ஆட்டங்களில் சிறப்பான தொடக்கம் தந்து விளையாடிய இந்த இணையை புவனேஷ்வர் முன்கூட்டியே ஆட்டமிழக்கச் செய்தது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.

இதையடுத்து, பென் ஸ்டோக்ஸ் மற்றும் டேவிட் மலான் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். பெரிய பாட்னர்ஷிப்பாக மாற்ற வேண்டிய நேரத்தில் நடராஜன் பந்தில் ஸ்டோக்ஸ் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லரை (15) ஷர்துல் தாக்குர் வீழ்த்தினார். இதனால், அந்த அணி 95 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

மலான் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் துரிதமாக ரன் சேர்த்து பாட்னர்ஷிப் அமைத்தனர். இதுவும் பெரிய பாட்னர்ஷிப்பாக மாற வேண்டிய நேரத்தில் ஷர்துல் தாக்குர் அதைப் பிரித்தார். லிவிங்ஸ்டன் 36 ரன்களுக்கு ஷர்துலிடமே கேட்ச் ஆனார். இவரைத் தொடர்ந்து, அரைசதம் அடித்த மலானும் ஷர்துல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய மொயீன் அலி 29 ரன்களுக்கு புவனேஷ்வரிடம் வீழ்ந்தார். 200 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகள் விழுந்ததால், வெற்றி வாய்ப்பு இந்தியா பக்கம் திரும்பியது.

ஆனால், சாம் கரனுக்கு ஒத்துழைப்பு தந்து அடில் ரஷித் விளையாட இந்த பாட்னர்ஷிப் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. இந்த இணை 8-வது விக்கெட்டுக்கு துரிதமாக 57 ரன்கள் சேர்த்தது. ஷர்துல் பந்தில் கோலியின் சிறப்பான கேட்ச்சால் ரஷித் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

எனினும், சாம் கரன் தொடர்ந்து அதிரடி காட்டி இந்திய அணியை மிரட்டி வந்தார். 45-வது பந்தில் முதல் ஒருநாள் அரைசதத்தை எட்டிய கரன், வுட்டுக்கு ஸ்டிரைக் தராமல் பெரும்பாலும் அவரே பேட்டிங் செய்து வந்தார்.

இதனால், கடைசி 5 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிக்கு 48 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

ஷர்துல் வீசிய 47-வது ஓவரில் சாம் கரன் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாச அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் கிடைத்தன.

இதனால், கடைசி 3 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிக்கு 23 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது.

புவனேஷ்வர் குமார் 48-வது ஓவரை சிறப்பாக வீசி 4 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதனால், கடைசி 2 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டன.

49-வது ஓவரை வீச ஹார்திக் பாண்டியா அழைக்கப்பட்டார். சாம் கரன் அடித்த 2-வது பந்தை தடுக்காமல் தவறவிட 1 ரன் கிடைத்தது. 3-வது பந்தில் வுட் தந்த எளிமையான கேட்ச்சை ஷர்துல் தவறவிட 1 ரன் கிடைத்தது. அடுத்த பந்தில் சாம் கரன் தந்த கேட்ச்சை நடராஜனும் தவறவிட 2 ரன்கள் கிடைத்தன. அடுத்தடுத்து கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. 

கடைசி பந்தில் சாம் கரன் 1 ரன் எடுத்தார். அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இதனால், கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

கடைசி ஓவரை வீச நடராஜன் அழைக்கப்பட்டார். முதல் பந்தை சாம் கரண் பவுண்டரி திசை நோக்கி அடித்து 2 ரன் எடுக்க முயற்சித்தார். ஆனால், பந்துவீசும் பகுதியில் கரன் கீழே விழுந்ததால், வுட் 2-வது ரன்னிலிருந்து திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், அவர் கிரீஸை அடைவதற்குள் ரன் அவுட் ஆனார். அவர் 14 ரன்கள் எடுத்தார்.

இதில் மிக முக்கியமாக கரன் ஸ்டிரைக்கில் இல்லை. ஆனால், கடைசி வீரராகக் களமிறங்கிய ரீஸ் டாப்லே 1 ரன் எடுத்து கரனிடம் ஸ்டிரைக்கைக் கொடுத்தார்.

3-வது பந்தையும் நடராஜன் சிறப்பான யார்க்கராக வீச கரன் ரன் எடுக்கவில்லை. கடைசி 3 பந்துகளில் இங்கிலாந்து வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டன. 4-வது பந்தையும் சிறப்பாக வீச பந்து பீல்டரிடம் சென்றதால் மீண்டும் ரன் எடுக்கவில்லை.

இதனால், கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர் தேவைப்பட்டது. ஆனால், 5-வது பந்தில் கரன் பவுண்டரி மட்டுமே அடிக்க இந்திய அணியின் வெற்றி உறுதியானது. கடைசி பந்தும் யார்க்கரால் சாம் கரனால் பவுண்டரி அடிக்க முடியவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 322 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாம் கரன் 83 பந்துகளில் 95 ரன்கள் விளாசினார். 

இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com