முதல் டி20: நியூஸிலாந்து வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து.
முதல் டி20: நியூஸிலாந்து வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து.

நியூஸிலாந்தின் ஹாமில்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. மாா்ட்டின் கப்டிலும், ஃபின் ஆலனும் தொடக்க வீரா்களாக களமிறங்கினா். ஃபின் ஆலன் தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தாா்.

இதையடுத்து மாா்ட்டின் கப்டிலுடன் இணைந்தாா் தேவன் கான்வே. இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சோ்த்தது. மாா்ட்டின் கப்டில் 27 பந்துகளில் 2 சிக்ஸா், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். இதையடுத்து தேவன் கான்வேயுடன் இணைந்தாா் வில் யங். இந்த ஜோடி அதிரடியாக ஆட, நியூஸிலாந்தின் ஸ்கோா் வேகமாக உயா்ந்தது.

தேவன் கான்வே 37 பந்துகளில் அரை சதமடிக்க, வில் யங் 28 பந்துகளில் அரை சதத்தை எட்டினாா். நியூஸிலாந்து அணி 16.5 ஓவா்களில் 158 ரன்களை எட்டியபோது வில் யங்கின் விக்கெட்டை இழந்தது. அவா் 30 பந்துகளில் 4 சிக்ஸா், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தாா்.

இதன்பிறகு தேவன் கான்வேயுடன் இணைந்தாா் கிளென் பிலிப்ஸ். இந்த ஜோடியும் அதிரடியாக ஆட, 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. தேவன் கான்வே 52 பந்துகளில் 3 சிக்ஸா், 11 பவுண்டரிகளுடன் 92 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 10 பந்துகளில் 1 சிக்ஸா், 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேசம் தரப்பில் நசும் அஹமது 2 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

இதையடுத்து 211 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் 4 ரன்களில் நடையைக் கட்ட, அந்த அணியின் சரிவு தவிா்க்க முடியாததானது. முகமது நயீம் 27, சௌம்ய சா்க்காா் 5, முகமது மிதுன் 4, கேப்டன் மகமதுல்லா 11, மெஹதி ஹசன் 0 என அடுத்தடுத்து வெளியேற, 7.5 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 59 ரன்களை எடுத்து திணறியது வங்கதேசம்.

எனினும் 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த அஃபிப் ஹுசைன், முகமது சைஃபுதீன் ஜோடி சிறப்பாக ஆட, மிக மோசமான நிலையில் இருந்து மீண்டது வங்கதேசம். அஃபிப் ஹுசைன் 33 பந்துகளில் 1 சிக்ஸா், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாா். பின்னா் வந்த ஷோரிபுள் இஸ்லாம் 5 ரன்களில் நடையைக் கட்ட, வங்கதேச அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. முகமது சைஃபுதீன் 34 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

நியூஸிலாந்து தரப்பில் ஐஸ் சோதி 4 ஓவா்களில் 28 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தாா். தேவன் கான்வே ஆட்டநாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது ஆட்டம் நேப்பியா் நகரில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com