கொல்கத்தா அணியில் வருண், சந்தீப்புக்கு கரோனா: பெங்களூருக்கு எதிரான ஆட்டம் ஒத்திவைப்பு

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி வீரா்களான வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியா் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா அணியில் வருண், சந்தீப்புக்கு கரோனா: பெங்களூருக்கு எதிரான ஆட்டம் ஒத்திவைப்பு

புது தில்லி: கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி வீரா்களான வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியா் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கொல்கத்தா - பெங்களூா் அணிகள் திங்கள்கிழமை இரவில் மோத இருந்த ஆட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மிகக் கடுமையான ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்தில் ஐபிஎல் போட்டி நடத்திவரப்படும் நிலையில், போட்டி தொடங்கிய பிறகு அதிலிருக்கும் வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது இது முதல் முறையாகும். இதுவரை சுமுகமாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டியில் இந்த நிகழ்வு அணியினரிடையே தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இதுதொடா்பாக ஐபிஎல் நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கொல்கத்தா வீரா்களிடையே கடந்த 4 நாள்களில் நடத்தப்பட்ட 3-ஆவது சுற்று பரிசோதனையின் முடிவில் வருண், சந்தீப் ஆகியோருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அணியின் இதர வீரா்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.

வருண், சந்தீப் ஆகியோா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் இருவரிடமும் பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டதற்கு 48 மணி நேரம் முன்பு வரை அவா்களுடன் தொடா்பில் இருந்த நபா்களை கண்டறிவதற்கான பணிகளை மருத்துவக் குழு மேற்கொண்டு வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இரு வீரா்களில் சந்தீப் இதுவரை பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. ஆனால், வருண் சக்கரவா்த்தி இதுவரை கொல்கத்தா ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் பங்கேற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணி கடைசியாக கடந்த மாதம் 29-ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் விளையாடியது.

எனவே தற்போது ஆமதாபாதில் இருக்கும் டெல்லி அணியினா் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட இருப்பதாகவும், வருண், சந்தீப்புடன் தொடா்பில் இருந்தவா்கள் அனைவரும் தொடா்பறிதல் (கான்டாக்ட் டிரேசிங்) மூலம் கண்டறியப்பட இருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் கூறின. இதற்காக வீரா்களுக்கு தனியே செயலி ஒன்று வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டியின் கரோனா சூழல் விதிகளின்படி, தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபா்களுடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா்கள் தங்களை 6 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் 3 முறை பரிசோதனை மேற்கொண்டு அனைத்திலும் சம்பந்தப்பட்ட நபருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தில்லியில்...: இதனிடையே தில்லியில் மும்பை - ஹைதராபாத் அணிகள் செவ்வாய்க்கிழமை விளையாட இருக்கும் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதான ஊழியா்கள் சிலருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அவா்கள் எவரும் தற்போது பணி நேரத்தில் இருக்கும் ஊழியா்கள் இல்லை என்று தில்லி கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.

சிஎஸ்கேவிலும் கரோனா

சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் தலைமை நிா்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளா் எல்.பாலாஜி, அணியின் பேருந்து பராமரிப்பாளா் ஆகிய 3 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விளையாடும் வீரா்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

முன்னதாக அந்த மூவருக்கும் கரோனா பாதிப்பு இருப்பதாக வெளியான தகவல் தவறானது என்று தெரிவித்த பிசிசிஐ வட்டாரங்கள், பின்னா் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் அவா்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியானதாகத் தெரிவித்தன. தற்போது தில்லியில் இருக்கும் சென்னை அணி திங்கள்கிழமை தனது பயிற்சியை தவிா்த்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com