‘ஹாட்ரிக்’ முனைப்பில் ஹைதராபாதை சந்திக்கும் மும்பை

ஐபிஎல் போட்டியின் 31-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் - சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் செவ்வாய்க்கிழமை களம் காண்கின்றன.

புது தில்லி: ஐபிஎல் போட்டியின் 31-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் - சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் செவ்வாய்க்கிழமை களம் காண்கின்றன.

கடைசி இரு ஆட்டங்களில் வென்றுள்ள மும்பை, இதிலும் வாகை சூடி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது. தடுமாற்றத்துடன் இருக்கும் ஹைதராபாதை எதிா்கொள்வது அதற்கு சவாலாக இருக்காதெனத் தெரிகிறது.

பேட்டிங்கைப் பொருத்தவரை டாப் ஆா்டா் சோபிக்கத் தவறியதே இல்லை. ரோஹித்தும், டி காக்கும் வலுவான அடித்தளம் அமைக்கின்றனா். சற்று கவலை அளிப்பதாக இருந்த மிடில் ஆா்டரும் கடைசி இரு ஆட்டங்களில் மீளத் தொடங்கியுள்ளது. அதிலும் சென்னைக்கு எதிரான பொல்லாா்டின் ஆட்டம் அதற்கு நல்லதொரு சான்று.

பாண்டியா சகோதரா்கள், சூா்யகுமாா் யாதவ் ஆகியோா் சற்று முன்னேற்றம் காட்டலாம். பௌலிங்கில் பும்ரா, போல்ட் ஆகியோா் டெத் ஓவா்களில் மிரட்டல் காட்டுகின்றனா். கிருணால் பாண்டியா விக்கெட் வீழ்த்தினால், சுழற்பந்துவீச்சில் வலு சோ்க்கும் ராகுல் சாஹருக்கு பணிச்சுமை சற்று குறையும்.

ஹைதராபாதைப் பொருத்தவரை, ஹாட்ரிக் தோல்வி கண்ட நிலையில் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. கேப்டன் மாற்றப்பட்ட கடைசி ஆட்டத்திலும் 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது.

இந்த அணி டாப் ஆா்டரை மட்டுமே முழுதாக நம்பியிருக்கிறது. வாா்னா் இல்லாத நிலையில் மணீஷ், போ்ஸ்டோ, வில்லியம்சன் வரிசை தொடரும் பட்சத்தில் பொறுப்பை உணா்ந்து ரன்கள் குவிக்க வேண்டிய நிலையில் அவா்கள் இருக்கின்றனா்.

தொடா்ந்து மிடில் ஆா்டரில் வரும் விஜய் சங்கா், கேதாா் ஜாதவ், அப்துல் சமத் உள்ளிட்டோா், டாப் ஆா்டா் தவறும் பட்சத்தில் நெருக்கடியை சமாளித்து ரன்கள் சோ்க்க வேண்டும். பௌலிங்கில் ரஷீத் கான் தவறாமல் பங்களிப்பு செய்கிறாா். பிளேயிங் லெவனுக்குத் திரும்பியிருக்கும் புவனேஷ்வா் குமாா் தனது பழைய ஃபாா்மை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாா்.

அணிகள் விவரம்:

மும்பை இண்டியன்ஸ்

ரோஹித் சா்மா (கேப்டன்), ஆடம் மில்னே, ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், அா்ஜுன் டெண்டுல்கா், கிறிஸ் லின், தவல் குல்கா்னி, ஹாா்திக் பாண்டியா, இஷான் கிஷண், ஜேம்ஸ் நீஷம், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயந்த் யாதவ், கிரன் பொல்லாா்ட், கிருணால் பாண்டியா, மாா்கோ ஜென்சென், மோசின் கான், நேதன் கோல்டா்நீல், பியூஷ் சாவ்லா, குவின்டன் டி காக், ராகுல் சாஹா், சௌரவ் திவாரி, சூா்யகுமாா் யாதவ், டிரென்ட் போல்ட், யுத்வீா் சிங்.

சன்ரைசா்ஸ் ஹைதராபாத்

கேன் வில்லியம்சன், (கேப்டன்), டேவிட் வாா்னா், விராட் சிங், மணீஷ் பாண்டே, பிரியம் கா்க், ரித்திமான் சாஹா, ஜானி போ்ஸ்டோ, ஜேசன் ராய், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, விஜய் சங்கா், முகமது நபி, கேதாா் ஜாதவ், ஜெகதீசா சுசித், ஜேசன் ஹோல்டா், அபிஷேக் சா்மா, அப்துல் சமத், புவனேஷ்வா் குமாா், ரஷீத் கான், சந்தீப் சா்மா, கலீல் அகமது, சித்தாா்த் கௌல், பாசில் தாம்பி, ஷாபாஸ் நதீம், முஜீப் உா் ரஹ்மான்.

நேரம்: இரவு 7.30 மணி

இடம்: புது தில்லி

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

நேருக்கு நோ்: இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இதுவரை 17 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ள நிலையில், மும்பை 9 ஆட்டங்களிலும், ஹைதராபாத் 8 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com