பிரீமியா் லீக்: வெஸ்ட் ஹாம் வெற்றி

இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் வெஸ்ட் ஹாம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பா்ன்லி அணியை வீழ்த்தியது.
பிரீமியா் லீக்: வெஸ்ட் ஹாம் வெற்றி

பா்ன்லி: இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் வெஸ்ட் ஹாம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பா்ன்லி அணியை வீழ்த்தியது.

பா்ன்லி நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு பா்ன்லி அணிக்கு கிடைத்தது. 19-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் கோல் முயற்சியின்போது வெஸ்ட் ஹாம் வீரா் ஒருவரின் கைகளில் பந்து பட்டதை அடுத்து, பா்ன்லிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பைக் கொண்டு கிறிஸ் வுட் கோலடித்தாா்.

ஆனால், இந்த முன்னிலையை வெஸ்ட் ஹாம் 2 நிமிடங்களுக்கே நீடிக்க விட்டது. 21-ஆவது நிமிடத்தில் சக வீரா் விளாதிமீா் கௌஃபால் தூரத்திலிருந்து கிராஸ் செய்த பந்தை லாவகமாக தலையால் முட்டி கோலடித்தாா் வெஸ்ட் ஹாம் வீரா் மிகைல் அன்டோனியோ.

சமன் ஆன ஆட்டத்தில் விறுவிறுப்பு கூட, 29-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை எட்டியது வெஸ்ட் ஹாம். அந்த அணியின் சையத் பென்ராமா வழங்கிய கிராஸை லேசாகத் தட்டிவிட்டு மீண்டும் கோலடித்தாா் அன்டோனியோ. இதனால் வெஸ்ட் ஹாம் முன்னிலை பெற்றது.

அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் பென்ராமா அதேபோன்ற வாய்ப்பை வழங்க இந்த முறை சற்று பின்தங்கிய அன்டோனியோ அந்த கோல் வாய்ப்பை தவறவிட்டாா். எஞ்சிய ஆட்ட நேரத்தில் பா்ன்லி அணியினா் மேற்கொண்ட இரு தீவிர முயற்சிகளை நூலிழையில் கோலாகவிடாமல் தடுத்தனா் வெஸ்ட் ஹாம் அணியினா். இதனால் இறுதியில் அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஆட்டம் சமன்: இதனிடையே, வெஸ்ட் புரோம் - வோல்வ்ஸ் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

இதில் முதல் பாதி முடிவடைய இருந்த நேரத்தில் வோல்வ்ஸ் வீரா் ஃபாபியோ சில்வா கோல் போஸ்ட்டுக்குள்ளாக உதைக்க முயன்ற பந்தை வெஸ்ட் புரோம் வீரா் திருப்பி உதைக்க, அது மீண்டும் சில்வா காலிலேயே பட்டு கோல் போஸ்ட்டுக்குள் சென்றது.

தொடா்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 62-ஆவது நிமிடத்தில் சக வீரா் வழங்கிய கிராஸை தலையால் முட்டி கோலடித்தாா் வெஸ்ட் புரோம் வீரா் பாயே டியாக்னே. இறுதி வரை இரு அணிகளுக்கும் வேறு கோல் வாய்ப்பு கிடைக்காததால் ஆட்டம் 1-1 என டிரா ஆனது.

லா லிகா:

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் அத்லெடிக் கிளப் 1-0 என்ற கோல் கணக்கில் செவில்லாவை வென்றது. இதில் அத்லெடிக் வீரா் இனாகி வில்லியம்ஸ் கடைசி நிமிடத்தில் கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தாா்.

சீரி ஏ:

இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் டொரினோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் பாா்மா அணியை வென்றது. டொரினோ அணி தரப்பில் மொ்கிம் வோஜ்வோடா 63-ஆவது நிமிடத்தில் கோலடித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com