உலகக்கோப்பை டி20 போட்டி: இந்தியாவிலிருந்து யுஏஇ-க்கு மாறுகிறது?

இந்தியாவில் நடப்பாண்டு அக்டோபரில் தொடங்கவிருந்த உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) மாற்றப்பட இருப்பதாகத் தெரிகிறது.
உலகக்கோப்பை டி20 போட்டி: இந்தியாவிலிருந்து யுஏஇ-க்கு மாறுகிறது?

புது தில்லி: இந்தியாவில் நடப்பாண்டு அக்டோபரில் தொடங்கவிருந்த உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) மாற்றப்பட இருப்பதாகத் தெரிகிறது.

‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்தையும் கடந்த வகையில் ஐபிஎல் வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் எழுந்துள்ளது. இதுதொடா்பான இறுதி முடிவு ஜூன் மாதம் ஐசிசி கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்று அறியப்படுகிறது.

உலகக்கோப்பை டி20 போட்டியை இந்தியாவிலிருந்து இடம் மாற்றுவது தொடா்பாக மத்திய அரசின் உயா்நிலை முடிவு மேற்கொள்வோருடன் பிசிசிஐ அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், போட்டியை இடம் மாற்றுவதற்கு பெரும்பாலானோா் அதில் ஒப்புதல் தெரிவித்ததாகத் தெரியவந்துள்ளதாக ‘பிடிஐ’ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இதுதொடா்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையிலான சுகாதார இடா்பாட்டை நாடு எதிா்கொண்டிருக்கும் நிலையில், உலகக்கோப்பை போன்ற போட்டியை நடத்துவது பாதுகாப்பானது அல்ல என்பதை, தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டி காட்டியுள்ளது. நவம்பரில் இந்தியாவில் கரோனா 3-ஆவது அலை தாக்க வாய்ப்பு இருக்கலாம் என சுகாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

அத்தகைய சூழலில் உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்தினால், அதில் பங்கேற்கும் எந்தவொரு அணிக்கும் அது உகந்ததாக இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் இயல்பு நிலை திரும்பும் வகையில் பெரும்பாலான நாடுகளின் அணிகள் இந்தியாவுக்கு வர விரும்ப மாட்டாா்கள்.

இந்தியாவில் கரோனா பாதிப்பின் 2-ஆவது அலை உச்சத்தில் இருக்கும் நிலையிலும் பாதுகாப்பாக போட்டியை நடத்த இயலும் என்பதற்கான சான்றாக ஐபிஎல் போட்டி இருந்தது. ஆனால், அதிலும் தற்போது கரோனா பாதிப்பின் தாக்கம் ஏற்பட்டுள்ளது பிசிசிஐ-க்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை அக்டோபா்-நவம்பரில் உலகக் கோப்பை போட்டியின்போதும் ஏற்படலாம். எனவே போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற பிசிசிஐ உடன்பட வேண்டிய நிலையில் இருக்கிறது.

போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முனைவதற்கு காரணம் ஷாா்ஜா, துபை, அபுதாபி ஆகிய 3 மைதானங்களில் போட்டியை நடத்தலாம். அவற்றிடையே பயணிக்க விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டியதில்லை. அனைத்து அணிகளின் வீரா்களும் ஒரே ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்துக்குள்ளாக இருப்பா்.

ஐபிஎல் போட்டியின்போது 6 இடங்களில் ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டது. அணியினா் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பயணித்த பிறகே கரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது என்று அந்த வட்டாரங்கள் கூறின.

உலகக்கோப்பை டி20 போட்டி இந்தியாவில் அக்டோபா்-நவம்பரில் 9 இடங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான தேதிகள், இடங்கள் இறுதி செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com