கரோனாவிலிருந்து மீண்டார் பிரசித் கிருஷ்ணா: மும்பைக்கு நாளை பயணம்!

இந்திய அணியினர் தனி விமானத்தில் ஜூன் 2 அன்று இங்கிலாந்துக்குப் புறப்படுகிறார்கள். 
கரோனாவிலிருந்து மீண்டார் பிரசித் கிருஷ்ணா: மும்பைக்கு நாளை பயணம்!

கரோனாவால் பாதிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அதிலிருந்து குணமாகிவிட்டார். இதையடுத்து மும்பையிலுள்ள இந்திய அணி வீரர்களுடன் நாளை இணையவுள்ளார்.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. 

கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.

மே 4 அன்று சஹா, அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அந்த நாளன்றுதான் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மே 8 அன்று பிரசித் கிருஷ்ணா கரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மூவரும் கரோனாவிலிருந்து மீண்டுவிட்டார்கள். தற்போது பெங்களூரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் பிரசித் கிருஷ்ணா, மும்பையில் தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களுடன் நாளை இணையவுள்ளார். இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் மாற்று வீரர்களில் ஒருவராக பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றுள்ளார். இந்திய அணியினர் தனி விமானத்தில் ஜூன் 2 அன்று இங்கிலாந்துக்குப் புறப்படுகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com