ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டதால் இந்திய அணிக்குக் கிடைத்த பலன்: நியூசி. வீரர் ராஸ் டெய்லர்

ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தயாராக...
ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டதால் இந்திய அணிக்குக் கிடைத்த பலன்: நியூசி. வீரர் ராஸ் டெய்லர்

ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தயாராக இந்திய அணிக்குக் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளதாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. 

கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக ஜூன் 2 அன்று இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. அதன்பிறகு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது.

ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டதால் இந்திய அணிக்குக் கிடைத்த பலன் பற்றி நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் கூறியதாவது:

அசாதாரணமான சூழலில் ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டது இந்திய அணிக்கு ஓரளவு கைகொடுத்துள்ளது. ஐபிஎல் போட்டி தொடர்ந்து நடைபெற்றிருந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்குத் தயாராக இந்திய அணிக்குக் குறைவான நாள்களே இருந்திருக்கும். இப்போது அவர்கள் நல்ல உடற்தகுதியில் இருப்பார்கள். பந்துவீச்சாளர்களும் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். எனினும் இங்கிலாந்துக்கு எதிராக இரு டெஸ்டுகளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு முன்பு விளையாடுவது எங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும். ஆனால் இந்திய அணி நெ.1 அணியாக நீண்ட நாள் உள்ளார்கள். அங்கு அவர்கள் நிறைய வெற்றிகளை அடைந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com