கரோனாவால் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதால் தூக்கமின்றி தவித்தேன்: அஸ்வின்

இனிமேல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியுமா என்று கூட அப்போது நினைத்தேன்...
கரோனாவால் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதால் தூக்கமின்றி தவித்தேன்: அஸ்வின்

கரோனாவால் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதால் தூக்கமின்றி தவித்தேன் என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அஸ்வின், இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து திடீரென பாதியில் விலகினார். குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்குத் துணையாக இருப்பதற்காக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுகிறேன். வாய்ப்பிருந்தால் மீண்டும் விளையாட வருகிறேன் என்றார்.

அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள். இதுபற்றிய தகவலை அஸ்வினின் மனைவி ப்ரீத்தி, ட்விட்டரில் தெரிவித்தார். ஒரே வாரத்தில் 6 பெரியவர்களும் 4 குழந்தைகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். வெவ்வேறு வீடு, மருத்துவமனைகளில் அனைவரும் சிகிச்சை பெறுகிறார்கள். கரோனாவால் பாதிப்படைந்தால் உடல்நலம் விரைவாக குணமாகிறது, ஆனால் மனநலம் மிகவும் பாதிப்படைகிறது. எல்லோரும் உதவிக்கு இருந்தாலும் யாரும் இல்லாததுபோல் இருக்கும். நம்மைத் தனிமைப்படுத்தும் நோய் இது. அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து யூடியூப் சேனலுக்கு அஸ்வின் பேட்டியளித்ததாவது:

கரோனாவால் வீட்டில் உள்ள கிட்டத்தட்ட அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். என்னுடைய சகோதரர்கள் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தது. நல்லவேளையாக மீண்டுவந்துவிட்டார்கள். இதனால் என்னால் 8,9 நாள்களுக்குச் சரியாகத் தூங்க முடியவில்லை. தூக்கம் இல்லாததால் எனக்கு மனஉளைச்சலாக இருந்தது. தூக்கம் இல்லாமல் ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி வந்தேன். ஒருகட்டத்தில் முடியாமல் போனதால் ஐபிஎல் போட்டியிலிருந்து பாதியில் விலகினேன். இனிமேல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியுமா என்று கூட அப்போது நினைத்தேன். அப்போது என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் நான் செய்தேன். என் குடும்பத்தினர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும்போது மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாடலாம் என நினைத்தேன். அந்தச் சமயத்தில் தான் ஐபிஎல் போட்டியை ஒத்திவைப்பதாக அறிவித்தார்கள் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com