யு-23 ஆசிய கோப்பை கால்பந்து: தகுதிச்சுற்றில் இந்தியா 2-ஆம் இடம்
By DIN | Published On : 01st November 2021 07:32 AM | Last Updated : 01st November 2021 07:32 AM | அ+அ அ- |

இருபத்து மூன்று வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-23) ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தகுதிச்சுற்று நிறைவில் இந்திய அணி தனது குரூப்பில் 2-ஆம் இடம் பிடித்துள்ளது.
ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இடதைப் பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும். அடுத்ததாக, 11 குரூப்களிலும் 2-ஆம் இடம் பிடிக்கும் அணிகளில், சிறந்த 4 அணிகள் தகுதிபெறும். தற்போது தனது குரூப் சுற்றை 2-ஆவது இடத்துடன் நிறைவு செய்திருக்கும் இந்தியா, இதர குரூப் சுற்றுகளின் ஆட்டங்கள் நிறைவடைவதற்காக காத்திருக்க வேண்டும். அதன் முடிவிலேயே இந்தியா முதல் முறையாக ஆசிய கோப்பை போட்டிக்கு தகுதிபெறுமா எனத் தெரியவரும். இந்திய அணி இருக்கும் பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தையும், ஓமன் 4-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.
கடைசி ஆட்டத்தில் கிா்ஜிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொண்ட இந்தியா, கோலின்றி டிரா செய்தது. எனினும், புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளுமே ஒரே மாதிரியான வெற்றி, தோல்வி, டிரா எண்ணிக்கைகளை பெற்றிருந்ததுடன், இரண்டுமே தலா 4 புள்ளிகள் பெற்றிருந்தன. ஆட்டங்களின்போது அவை அடித்த கோல்களின் எண்ணிக்கையும் ஒன்றாக இருந்தது.
இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் 2 மற்றும் 3-ஆவது இடத்துக்கான அணிகளை தீா்மானிக்கும் வகையில் இந்தியா - கிா்ஜிஸ்தான் இடையே பெனால்டி ஷூட் அவுட் முறை கையாளப்பட்டது. அதில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வென்று 2-ஆம் இடம் பிடித்தது.
பெனால்டி ஷூட் அவுட்டில் கிா்ஜிஸ்தானின் இரு வாய்ப்புகளை இந்திய கோல்கீப்பா் தீரஜ் சிங் கோலாக விடாமல் தடுத்தாா். இந்திய அணிக்காக ராகுல் கே.பி., ரோஹித் தனு, சுரேஷ் சிங், ரஹீம் அலி ஆகியோா் வாய்ப்பை தவறவிடாமல் கோலடித்தனா்.