இந்திய அணியில் ருதுராஜ் கெயிக்வாட்: சாதித்த சிஎஸ்கே வீரர்

ரசிகர்களின் கனவு நிறைவேறியிருக்கிறது....
இந்திய அணியில் ருதுராஜ் கெயிக்வாட்: சாதித்த சிஎஸ்கே வீரர்


இந்திய அணியில் ருதுராஜுக்கு நிரந்தரமாக இடம் கிடைக்க வேண்டும் என்கிற ரசிகர்களின் கனவு நிறைவேறியிருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டி20 அணியில் ருதுராஜ் கெயிக்வாட் தேர்வாகியுள்ளார். 

ஐபிஎல் 2021 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 24 வயது ருதுராஜ் முதலிடம் பிடித்தார். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் (24) ஆரஞ்ச் தொப்பியைப் பெற்றவர் என்கிற பெருமையையும் அடைந்தார். 

இந்த வருடம் 16 ஆட்டங்களில் 635 ரன்கள் எடுத்துள்ளார்  ருதுராஜ். 4 அரை சதங்கள், 1 சதம். ஸ்டிரைக் ரேட் - 136.26. 23 சிக்ஸர்கள். ஒரு பருவத்தில் 600 ரன்கள் எடுத்த 3-வது சிஎஸ்கே வீரர். இதற்கு முன்பு ஹஸ்ஸி, ராயுடு இந்த இலக்கை எட்டியுள்ளார்கள். 

ஐபிஎல் 2020 போட்டியில் முதல் 3 ஆட்டங்களில் 0,5,0 என மோசமாகவே ஆரம்பித்தார். பிறகுதான் தன்னுடைய நிஜத் திறமையை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்து மூன்று அரை சதங்கள் அடித்தார். இந்திய அணியில் இடம்பெறாத ஒரு வீரர் ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்தது அதுதான் முதல் தடவை. 6 ஆட்டங்களில் 204 ரன்கள் எடுத்த ருதுராஜ் 3 அரை சதங்கள் எடுத்தார். அப்போதே தோனி எதிர்பார்த்த தீப்பொறி, ருதுராஜிடம் தென்பட்டதால் இந்த வருடம் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினார்.

2021 ஐபிஎல் போட்டியின் ஆரம்பமும் ருதுராஜுக்குப் பிரமாதமாக அமையவில்லை. 5, 5, 10 என ரன்கள் எடுத்தார். உள்ளே உத்தப்பா வாய்ப்புக்குக் காத்துக்கொண்டிருந்ததால் சிஎஸ்கே அணி என்ன முடிவெடுக்கும் என்கிற ஆவல் ஏற்பட்டது. ஆனால் ருதுராஜுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்தார் தோனி. கொல்கத்தாவுக்கு எதிராக 64 ரன்கள் எடுத்தார். ரன் வேட்டை ஆரம்பமானது. 2018 ஐபிஎல் இறுதிச்சுற்றில் சிஎஸ்கேவின் ஷேன் வாட்சன் சதமடித்தார். அதன்பிறகு இந்தப் பருவத்தில் ருதுராஜ், ராஜஸ்தானுக்கு எதிராக அட்டகாசமான சதமடித்தார். அந்தக் கடைசிப் பந்து சிக்ஸரை யாரால் மறக்க முடியும்? வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என இரண்டிலும் தடுமாற்றமில்லாமல் ஆடுகிறார். அதிரடியாக விளையாடும்போதும் நிதானம் தவறுவதில்லை. நடு ஓவர்களில் அதிரடி ஆட்டத்தைக் காண்பித்து எதிரணிகளுக்குக் கிலி ஏற்படுத்தி வருகிறார். ருதுராஜ் தொடர்ந்து ரன்கள் குவிப்பதைக் கட்டுப்படுத்த முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறினார்கள் என்பதே உண்மை. இந்திய இளம் தொடக்க வீரர்களில் பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கல்லை விடவும் மிகத்திறமையானவர் என்கிற நம்பிக்கையை ஐபிஎல் 2021 போட்டியின் முடிவில் பெற்றார். அதனால் தான் அவ்விருவரும் இந்திய ஏ அணிக்குத் தேர்வாக, நேரடியாக இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார் ருதுராஜ். 

ஐபிஎல் போட்டியில் விளையாடிய 22 ஆட்டங்களிலேயே 7 ஆட்ட நாயகன் விருதுகளை ருதுராஜ் வென்றுள்ளார். அதாவது கிட்டத்தட்ட 3 ஆட்டங்களுக்கு ஒருமுறை அந்தப் பட்டத்தைத் தன்வசமாக்கிவிடுகிறார். இதுவும் ஒரு சாதனைதான். இதற்கு முன்பு மைக்கேல் ஹஸ்ஸி, 4.92 ஆட்டங்களுக்கு ஒருமுறை ஆட்ட நாயகன் விருதை வென்றார் (59 ஆட்டங்களில் 12 விருதுகள்). சிஎஸ்கேவுக்குப் பெரிய பலமாக இருந்து கோப்பையை வென்று தந்த ருதுராஜை 2019 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மட்டுமே தேர்வு செய்தது சிஎஸ்கே அணி. சின்ன கல்லு பெரிய லாபம். 

இந்திய அணிக்காக இலங்கையில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் ருதுராஜ். ஐபிஎல் 2021 போட்டி முடிந்த பிறகு பல வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களும் சொன்னது, ருதுராஜுக்கு இந்திய அணியில் வளமான எதிர்காலம் உண்டு என்பதுதான். 

ஐபிஎல் போட்டியை முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள ருதுராஜ், சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலும் நன்கு விளையாடி வருகிறார். மஹாராஷ்டிர அணி கேப்டனான ருதுராஜ், 5 ஆட்டங்களில் 3 அரை சதங்களுடன் 259 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 149.71.

இனிமேலும் தவிர்க்க முடியாது என்பதால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ருதுராஜ் தேர்வாகியுள்ளார். ஆனால் ரோஹித், ராகுல், வெங்கடேஷ் ஐயர், இஷான் கிஷன் என ஏற்கெனவே 4 தொடக்க வீரர்கள் அணியில் இருப்பதால் ருதுராஜுக்கு உடனடியாக வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை. எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் ஐபிஎல்-லில் வெளிப்படுத்திய ஆட்டத்தை மீண்டும் காணலாம் என்கிற நம்பிக்கையை மட்டும் ரசிகர்கள் இழக்கவில்லை. இனி ருதுராஜ் - மஹாராஷ்டிர, சிஎஸ்கே வீரர் மட்டுமல்ல, பெருமைமிகு இந்திய வீரர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com