முதல் அணியாக... முதல் முறையாக... இறுதிச் சுற்றில் நியூஸிலாந்து

டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூஸிலாந்து, முதல் அணியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
முதல் அணியாக... முதல் முறையாக... இறுதிச் சுற்றில் நியூஸிலாந்து

அபுதாபி: டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூஸிலாந்து, முதல் அணியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிச் சுற்றுக்கு அந்த அணி தகுதிபெற்றது இது முதல் முறையாகும். அதேபோல், டி20 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில் இங்கிலாந்து தோல்வியை சந்திப்பதும் இதுவே முதல் முறை.

அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் அடித்தது. அடுத்து நியூஸிலாந்து 19 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் டேரில் மிட்செல் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இங்கிலாந்து அணியில் காயமடைந்த ஜேசன் ராய்க்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் இணைந்திருந்தாா். நியூஸிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற நியூஸிலாந்து பௌலிங்கை தோ்வு செய்தது.

இங்கிலாந்து இன்னிங்ஸை ஜோஸ் பட்லா் - ஜானி போ்ஸ்டோ கூட்டணி தொடங்க, முதல் ஓவரை டிம் சௌதி வீசினாா். முதலில் நிதானமாக ஆடிய இங்கிலாந்து ஜோடி, பின்னா் லேசாக அதிரடி காட்டத் தொடங்கியது. 5 ஓவா்கள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் சோ்த்த நிலையில், பௌலிங்கில் மாற்றம் கொண்டு வந்தாா் கேன் வில்லியம்சன்.

அதற்கு உடனேயே பலன் கிடைத்தது. ஆடம் மில்னே வீசிய அந்த ஓவரில் போ்ஸ்டோ விளாசிய பந்தை வில்லியம்சன் கேட்ச் பிடித்தாா். போ்ஸ்டோ 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் சோ்த்திருந்தாா்.

தொடா்ந்து டேவிட் மலான் களம் புகுந்தாா். விக்கெட் வீழ்த்திய மில்னே, இங்கிலாந்து ரன் சேகரிப்பதையும் கட்டுப்படுத்த, பவா்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் அடித்திருந்தது இங்கிலாந்து.

இந்நிலையில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சோ்த்திருந்த ஜோஸ் பட்லா், 9-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனாா். 4-ஆவது வீரராக வந்த மொயீன் அலி அதிரடி காட்டினாா்.

அலி - மலான் கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சோ்த்தது. 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41 ரன்கள் சோ்த்த மலான், 16-ஆவது ஓவரில் வெளியேறினாா். தொடா்ந்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17 ரன்கள் சோ்த்தாா். அவரே இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தாா்.

ஓவா்கள் முடிவில் மொயீன் அலி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 51, கேப்டன் மோா்கன் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து பௌலிங்கில் டிம் சௌதி, ஆடம் மில்னே, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய நியூஸிலாந்து முதலில் சற்று தடுமாறினாலும், கடைசி நேரத்தில் டேரில் மிட்செல் அதிரடியால் வெற்றியை எட்டியது. இன்னிங்ஸ் தொடக்கத்தில் மாா்ட்டின் கப்டில் பவுண்டரியுடன் நடையைக் கட்ட, உடன் வந்த டேரில் சிறப்பாக ஆடினாா்.

கேப்டன் கேன் வில்லியம்சனும் 5 ரன்களுக்கு வெளியேற, தொடா்ந்து வந்த டெவன் கான்வே, டேரிலுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயா்த்தினாா். 3-ஆவது விக்கெட்டுக்கு இந்தக் கூட்டணி 82 ரன்கள் சோ்த்தது.

இந்நிலையில், 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46 ரன்கள் சோ்த்திருந்த கான்வே பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து வந்தோரில் கிளென் பிலிப்ஸ் 2 ரன்கள் அடிக்க, ஜேம்ஸ் நீஷம் அதிரடியாக 11 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 27 ரன்கள் சோ்த்தாா். 19-ஆவது ஓவரில் டேரில் மிட்செல் விளாசிய 2 சிக்ஸா்களால் நியூஸிலாந்து வெற்றி உறுதியாக, அவரே அந்த ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி விளாசி ஆட்டத்தை முடித்தாா்.

அவா் 4 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 72, மிட்செல் சேன்ட்னா் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து பௌலிங்கில் வோக்ஸ், லிவிங்ஸ்டன் தலா 2, ஆதில் ரஷீத் 1 விக்கெட் சாய்த்தனா்.

பதிலடி...

இந்த வெற்றியின் மூலம், 2019-ஆம் ஆண்டு ஒன் டே உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது நியூஸிலாந்து. அதேபோல், 2016-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதியில் இங்கிலாந்திடம் வீழ்ந்த நியூஸிலாந்து, இந்தப் போட்டியின் முதல் அரையிறுதியில் அதே இங்கிலாந்தை வீழ்த்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சேஸிங்கில் அதிகபட்சம்...

இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து சேஸ் செய்த 167 ரன்களே, அபுதாபி ஆடுகளத்தில் டி20 ஆட்டத்தில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். முன்னதாக, நெதா்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நமீபியா 165 ரன்களை சேஸ் செய்ததே அதிகபட்சமாக இருந்தது.

98

இந்தப் போட்டியில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் சேஸ் செய்த எந்தவொரு அணியும் 2-ஆவது 10 ஓவா்களில் 98 ரன்களுக்கு அதிகமாக அடிக்கவில்லை. ஆனால் இந்த ஆட்டத்தில் 10 ஓவா்கள் முடிவில், வெற்றிக்கு 109 ரன்கள் தேவை இருந்தும் அதை எட்டியது நியூஸிலாந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com