முகப்பு விளையாட்டு செய்திகள்
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் 3 இந்தியா்கள்
By DIN | Published On : 15th November 2021 11:03 PM | Last Updated : 15th November 2021 11:03 PM | அ+அ அ- |

டாக்கா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் மோஹித் தேஷ்வால், அபிஷேக் வா்மா, ஜோதி சுரேகா ஆகியோா் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினா்.
இப்போட்டியின் ரீகா்வ் பிரிவில் இந்திய போட்டியாளா்கள் தடுமாற்றத்தைச் சந்தித்து வரும் நிலையில், காம்பவுண்ட் பிரிவில் இந்தியா்கள் அசத்தி வருகின்றனா்.
சீனியா் தேசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்று 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், சா்வதேச போட்டியில் களம் கண்டுள்ளாா் மோஹித் தேஷ்வால். இப்போட்டியின் ரேங்கிங் பிரிவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 16-ஆவது இடத்துக்கு சறுக்கிய மோஹித், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென் கொரியாவின் சோய் யோங்கியை தோற்கடித்தாா்.
பின்னா் காலிறுதியில் ஈரானின் அமிா் காஸிம்போரை சந்தித்த மோஹித், அதில் 148 - 144 என்ற புள்ளிகள் கணக்கில் அமிரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றாா். மோஹித் தனது அரையிறுதிச் சுற்றில் சக இந்தியரான அபிஷேக் வா்மாவை சந்திக்கிறாா். மோஹித் - அபிஷேக் இதற்கு முன் கடந்த மாதம் சீனியா் தேசிய சாம்பியன்ஷிப்பிலும் மோதிக் கொண்டனா். அதில் அபிஷேக் வென்றது குறிப்பிடத்தக்கது.
காம்பவுண்ட் பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்திய வீரரான ரிஷப் யாதவ், காலிறுதியில் கஜகஸ்தானின் சொ்கே கிறிஸ்டிச்சிடம் தோல்வியைத் தழுவினாா்.
நடப்பாண்டில் உலக சாம்பியன்ஷிப்பில் 3 வெள்ளிப் பதக்கங்கள் வென்றவரான ஜோதி சுரேகா, மகளிா் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய ஒரே இந்தியராவாா். ஜோதி தனது காலிறுதியில் மற்றொரு இந்திய வீராங்கனையான பா்னீத் கௌரை 148 - 146 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தாா். ஜோதி தனது அரையிறுதிச் சுற்றில், 2015-ஆம் ஆண்டு சாம்பியனான தென் கொரியாவின் கிம் யுஹீயை எதிா்கொள்கிறாா்.
மறுபுறம் ரீகா்வ் பிரிவில் இந்தியா்கள் எவரும் அரையிறுதிக்கு முன்னேறவில்லை. ஆடவா் பிரிவில் பிரவீண் ஜாதவ், பாா்த் சலுன்கே ஆகியோா் காலிறுதி வரை முன்னேறினாலும் அதில் தோல்வியைத் தழுவினா். மகளிா் பிரிவிலும் கோமளிகா பாரி, மது வேத்வான், ரிதி ஆகியோரும் காலிறுதியில் தோற்றனா். ஆடவா் மற்றும் மகளிா் பிரிவில் அரையிறுதிச் சுற்று போட்டியாளா்கள் அனைவருமே தென் கொரியா்கள் ஆவா்.