ஆஸி. கேப்டன் பதவியிலிருந்து டிம் பெயின் திடீர் விலகல்: காரணம் என்ன?
By DIN | Published On : 19th November 2021 11:14 AM | Last Updated : 19th November 2021 11:43 AM | அ+அ அ- |

பாலியல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காரணத்துக்காக ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் ஆஸி. கேப்டன் டிம் பெயின்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 8-ல் ஆரம்பித்து ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. இரு நாள்களுக்கு முன்பு டிம் பெயின் தலைமையிலான ஆஸி. அணி அறிவிக்கப்பட்டது.
2018-ல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 46-வது கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெயின் நியமிக்கப்பட்டார். 2019 ஆஷஸ் தொடரில் கோப்பையைத் தக்கவைக்க உதவினார். இந்நிலையில் பாலியல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காரணத்துக்காக கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் டிம் பெயின்.
2017-ல் கிரிக்கெட் டாஸ்மேனியா அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை டிம் பெயின் அனுப்பியுள்ளார். இதுதொடர்பான செய்திகள் சமீபத்தில் வெளியாயின. இந்த விவகாரம் தொடர்பாக சில வருடங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. அதில் டிம் பெயின், விதிமுறைகளை மீறவில்லை என்பதால் தண்டனையிலிருந்து தப்பினார். இந்நிலையில் இந்தச் சர்ச்சை ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் இச்சூழலில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நீடிப்பது உகந்ததாக இருக்காது எனக் கருதி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக டிம் பெயின் கூறியுள்ளார். எனினும் ஆஷஸ் தொடரில் ஒரு வீரராகப் பங்குபெற விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்படவுள்ளார்.