3-0: கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. 
பாபர் அஸாம் - ரிஸ்வான் (கோப்புப் படம்)
பாபர் அஸாம் - ரிஸ்வான் (கோப்புப் படம்)

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 12 சுற்றில் வங்கதேச அணி விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோற்றது. அடுத்ததாக, சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 டி20, 2 டெஸ்ட் ஆட்டங்களில் அந்த அணி விளையாடுகிறது. இன்றுடன் டி20 தொடர் நிறைவடைந்தது. நவம்பர் 26 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

முதல் இரு டி20 ஆட்டங்களை வென்று தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான். டாக்காவில் இன்று நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் முகமது நயீம் 47 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம், உஸ்மான் காதிர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

இதன்பிறகு பாகிஸ்தான் இலக்கை நன்கு விரட்டியது. ரிஸ்வான் 40 ரன்களும் ஹைதர் அலி 45 ரன்களும் எடுத்தார்கள். கடைசி ஓவரில் வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்டன. மஹ்முதுல்லா சிறப்பாக வீசி முதல் 3 பந்துகளுக்கு ரன் எதுவும் கொடுக்காமல் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இஃப்திகார் ஒரு சிக்ஸர் அடித்து நிலைமையைச் சீராக்கினார். 5-வது பந்தில் அவரை வீழ்த்தினார் மஹ்முதுல்லா. கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் அவருக்குக் கிடைத்தன. இதனால் கடைசிப் பந்தில் வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டன. நவாஸ் ஒரு பவுண்டரி அடித்து பாகிஸ்தான் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com